தேனியில் விதிமீறி இயங்கும் ஆட்டோ, பஸ்களால் நெரிசல் நடவடிக்கைக்கு தயங்கும் அதிகாரிகள்
தேனி:தேனி நகர்பகுதியில் விதிகளை பின்பற்றாமல் இயக்கும் ஆட்டோக்கள், பஸ்களால் போக்குவரத்து நெரிசல், விபத்துக்கள் தொடர்கிறது. போக்குவரத்து போலீசார், வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகளிடையே ஒருங்கிணைப்பு இல்லாததால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகுகின்றனர். தேனி நகர்பகுதியில் பழைய பஸ் ஸ்டாண்டில் ராஜவாய்க்கால் சீரமைப்பு பணி நடைபெறுவதால் பஸ் ஸ்டாண்டில் பஸ்கள் நுழைய தடை செய்யப்பட்டுள்ளது. அதே நேரம் பெரியகுளம் ரோடு, கம்பம் ரோடு, மதுரை ரோட்டில் மக்கள் நடந்து செல்ல முடியாத அளவிற்கு ஆட்டோக்களை நிறுத்துகின்றனர். ஆட்டோக்கள் பாதி ரோடு வரை நிறுத்தப்படுவதால் மற்ற வாகனங்கள் செல்ல முடியாமல் ஸ்தம்பித்து நிற்கின்றன. சிக்னலில் குறிப்பிட்ட துாரம் தான் வாகனங்கள் நிறுத்த வேண்டும் என குறிப்பிட்டிருந்தாலும் ரோடு முழுவதையும் மறித்து வாகன ஓட்டிகள் நிறுத்துகின்றனர். ஆனாலும் போக்குவரத்து போலீசார் கண்டு கொள்வதில்லை. இதனால் சிக்னலில் இடது புறம் திரும்பி செல்ல வேண்டிய வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள் காத்திருக்கும் நிலை தொடர்கிறது. சிக்னல் அருகே பெரியகுளம் ரோடு, வார சந்தை அன்று சந்தை மாரியம்மன் கோயில் நுழைவாயில், கம்பம் ரோடு வளைவு ஆகிய பகுதிகளில் ஆட்டோக்கள் போக்குவரத்திற்கு இடையூறுாக நிறுத்தப்படுகினறன. தாராளம் தேனியில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட பதிவு எண் உள்ள ஆட்டோக்களும் இயக்கப்படுகிறது. அதும் எதிர்திசையில் இயக்குவது, சமிக்கை தராமல் திருப்புவது அதிகம். நகர்பகுதியில் பஸ்கள் அதி வேகத்துடனும், அதிக ஒலி எழுப்பும் ஹாரன்கள் பொருத்தப்பட்டு இயக்கப்படுவதால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். நகர்பகுதியில் வட்டார போக்குவரத்து அலுவலர், வாகன ஆய்வாளர்கள் சோதனை என்பது இல்லை. எனவே, விதிமீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.