ஆக்கிரமிப்பு அகற்றுவதில் அரசியல் குறுக்கீடு: அதிகாரிகள் புலம்பல்
தேனி: மாவட்டத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் அரசியல் குறுக்கீடு உள்ளதால் அகற்றும் அதிகாரி மீது புகார் அளிப்பதாக வருவாய்த்துறையினர் புலம்பி வருகின்றனர். மாவட்டத்தில் நீர்வழித்தடங்கள், மலைகளை ஒட்டிய பகுதிகள், அரசு புறம்போக்கு நிலங்களில் பலர் ஆக்கிரமித்து உள்ளனர். இதனை அகற்ற வருவாய்த்துறையினர் பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகின்றனர். சில சமூக ஆர்வலர்களும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கின்றனர். ஆனால், பெரும்பாலான ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதில்லை. இதனால் மாவட்டத்தில் ஆக்கிரமிப்பால் ரோடுகள், நீர்வழிப்பாதைகள் சுருங்கி வருகின்றன. இதுபற்றி வருவாய்த்துறையினர் சிலர் கூறியதாவது: ஆக்கிரமிப்பு தொடர்பான புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க கள ஆய்விற்கு அலுவலர்கள் செல்கிறோம். ஆக்கிரமிப்பு என உறுதியான பின் அதனை அகற்ற பணிகளை துவுங்குகின்றோம். பணியை துவங்கினால், எந்த அதிகாரி தலைமையில்பணி துவங்குகிறதோ அவர்மீது பல்வேறு புகார்களை ஆக்கிரமிப்பாளர்கள் அனுப்புகின்றனர். அது தவிர அரசியல் குறுக்கீடுகள் உள்ளன. இதனால் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளை பாதியில் விட்டு விடும் சூழல் உள்ளது. அதே சமயம் நீதிமன்ற உத்தரவு என்றால் மட்டும் முழுவதும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் நிலை உள்ளது என்றனர்.