பள்ளிகளில் ஓணம் கொண்டாட்டம்
மூணாறு: மூணாறு பள்ளிகளில் ஓணம் கொண்டாட்டம் கோலாகலமாக நடந்து வருகிறது. கேரளாவில் முக்கிய பண்டிகையான ஓணம் செப்.5ல் கொண்டாடப்படுகிறது. அதனை முன்னிட்டு மகாபலி மன்னனை வரவேற்கும் வகையில் மலையாள சிங்க மாதத்தின் அத்தம் நட்சத்திரம் முதல் திருவோணம் வரை பத்து நாட்கள் வீடுகள் முன்பு வண்ண மலர்களால் அத்தப்பூ கோலமிடுவது வழக்கம். அரசு அலுவலகங்கள், பள்ளிகள், வங்கிகள், தனியார் நிறுவனங்கள் என அனைத்து தரப்பினரும் அத்தப்பூ கோலமிட்டு, 'ஓண சத்யா' எனும் சைவ விருந்து படைத்து கொண்டாடி மகிழ்வர். அதன்படி அத்தம் நட்சத்திரமான நேற்று முன்தினம் (ஆக.27ல்) முதல் ஓணம் கொண்டாட்டம் துவங்கியது. மூணாறில் பள்ளிகளில் ஓணம் கொண்டாட்டம் துவங்கி கோலாகலமாக நடந்து வருகிறது. குறிப்பாக தமிழ் மீடியம் பள்ளிகளில் ஓணம் களை கட்டியது. மூணாறு அருகே சிவன்மலை எஸ்டேட்டில் அரசு உதவி பெறும் ஆரம்பப் பள்ளியில் ஓணம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. கேரள மக்களின் பாரம்பரிய உடை அணிந்த மாணவ, மாணவிகள் அத்தப்பூ கோலமிட்டு மகாபலி மன்னன் உட்பட பலரது வேஷங்களில் அசத்தினர். சிவன்மலை எஸ்டேட் பொது மேலாளர் பிரமோத்கிருஷ்ணா விழாவை துவக்கி வைத்தார். தலைமை ஆசிரியர் வேளாங்கண்ணி, ஆசிரியர் விஸ்வநாதன், ஆசிரியை முத்துலெட்சுமி உட்பட மாணவ, மாணவிகளின் பெற்றோர் பங்கேற்றனர். அனைவருக்கும் 'ஓண சத்யா' எனும் சைவ விருந்து பரிமாறப்பட்டது.