தேனியில் வெள்ள பாதிப்பு பன்னீர்செல்வம் கோரிக்கை
சென்னை: 'தேனி மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை சரி செய்து, நிவாரண உதவிகள் வழங்க வேண்டும்' என, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார். அவரது அறிக்கை: வடகிழக்கு பருவ மழை, தமிழகத்தில் அதிகம் பெய்ய கூடியது என்பது தெரிந்தும், தமிழக அரசு அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. 32 ஆண்டுகளுக்கு பின், தேனியில் பெய்த அதிகனமழை காரணமாக, மாவட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அறுவடைக்கு தயாராக இருந்த நெல் சேதமடைந்துள்ளன. ஆயிரக்கணக்கான கோழிகள், நுாற்றுக்கணக்கான கால்நடைகள் பலியாகி உள்ளன.இருப்பினும், நிவாரண நடவடிக்கைகள் சரிவர மேற்கொள்ளப்படவில்லை. முதல்வர் தலையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க, அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். சேதமடைந்த பயிர்கள், உயிரிழந்த கோழி, கால்நடைகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.