தேனி - பெரியகுளம் ரோட்டில் டூவீலர் ரேஸ் ஓட்டத்தால் அச்சம் பாதசாரிகள், பிற வாகன ஓட்டிகள் அவதி
தேனி: தேனியில் அல்லிநகரம் பஸ் ஸ்டாப் முதல் அன்னஞ்சி விலக்கு வரை உள்ள பெரியகுளம் ரோட்டில் இரவில் சில வாலிபர்கள் 'டூவீலர் ரேஸ்' விடுவதால் வாகன ஓட்டிகள்,பாதசாரிகள்அவதிப்படுகின்றனர். -பெரியகுளம் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் உள்ள அல்லிநகரம், பொம்மையக்கவுண்டன்பட்டி பகுதிகள் எப்போதும் பரபரப்பாக காணப்படும். அதே நேரம் இரவில் பொம்மையகவுண்டன்பட்டி சாலைப்பிள்ளையார் கோயிலில் இருந்துஅன்னஞ்சி விலக்கு வரை குடியிருப்புகள், வணிக வளாகங்கள் அதிகம் இருந்தாலும் சென்டர் மீடியன் விளக்கு, ரோட்டோர விளக்குகள் இன்றி இருள் சூழ்ந்து காணப்படுகிறது.இந்த ரோட்டில் இரவு 9:30 மணிக்கு மேல் சில வாலிபர்கள் அதிக சத்தம் எழுப்பக்கூடிய டூவீலர்களில் ரேஸ் செல்லுகின்றனர். அந்த சமயத்தில் அவ்வழியாக செல்லக்கூடிய பிற வாகன ஓட்டிகள், பாதசாரிகள் அச்சத்துடன் செல்லும் நிலை தொடர்கிறது. போலீசார் இந்த ரோட்டில் இரவில் சில இடங்களில் திடீர் வாகன சோதனை நடத்த வேண்டும். சென்டர் மீடியன்களில் விளக்கு வசதி ஏற்படுத்திட ரத்தினம் நகர், ஈஸ்வர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் குடியிருப்போர் கோரிக்கை விடுத்துள்ளனர்.