உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மழை தீவிரம் குறைந்ததால் மக்கள் நிம்மதி: 148 வீடுகள் சேதம்

மழை தீவிரம் குறைந்ததால் மக்கள் நிம்மதி: 148 வீடுகள் சேதம்

மூணாறு: இடுக்கி மாவட்டத்தில் ஒரு வாரமாக பெய்த கன மழையின் தீவிரம் நேற்று குறைந்ததால் மக்கள் நிம்மதி அடைந்தனர்.இம்மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை துவங்கிய மே 24 முதல் நேற்று முன்தினம் இரவு வரை இடைவிடாமல் கனமழை பெய்தது. அதனால் உயிர் பலி உள்பட பல்வேறு சேதங்கள் ஏற்பட்டன.மூணாறு உள்ளிட்ட மலையோரப் பகுதிகளில் மண் மற்றும் நிலச்சரிவு அபாயம் ஏற்பட்டதால் மக்கள் அச்சம் அடைந்தனர்.இம்மாவட்டத்திற்கு நேற்று பலத்த மழைக்கான 'எல்லோ அலர்ட்' விடுக்கப்பட்டபோதும் மழையின் தீவிரம் வெகுவாக குறைந்ததால் மக்கள் நிம்மதி அடைந்தனர்.நேற்று காலை நிலவரப்படி மாவட்டத்தில் சராசரி மழை 35.34 மி.மீ., பதிவானது. பீர்மேடு தாலுகாவில் அதிகபட்சமாக 88.1, உடும்பன்சோலை தாலுகாவில் மிகவும் குறைவாக 6.2 மி.மீ., மழை பதிவானது.மூணாறில் நேற்று முன்தினம் காலை 8:00 மணி நிலவரப்படி 140 மி.மீ., மழை பெய்த நிலையில், நேற்று காலை நிலவரப்படி 30.6 மி.மீட்டராக குறைந்தது.

சேதம் அதிகரிப்பு

இம்மாவட்டத்தில் பலத்த காற்று, மழையால் நேற்று மதியம் 12:00 மணி நிலவரப்படி ஒரே நாளில் 14 வீடுகள் சேதமடைந்தன. தொடுபுழா அருகே சாத்தன்மலை ரோட்டில் விஜயன் என்பவர் வீட்டின் சுற்றுச்சுவர், ராஜாக்காடு அருகே முள்ளிரிகுடியில் தென்னை மரம் சாய்ந்து அங்கன்வாடி கட்டடத்தின் கூரை சேதமடைந்தன.கட்டப்பனை அருகே அய்யப்பன் கோயில் மாட்டுக்கட்டா பகுதியில் சிஜூ என்பவரின் ஓர்க் ஷாப் மீது மரம் சாய்ந்து தனியார் பள்ளி பஸ், லாரி சேதமடைந்தன.அடிமாலி அருகே கல்லார் பகுதியில் நாகராஜ் வீட்டின் மீது மரம் சாய்ந்து வீடு, கார் ஆகியவை சேதமடைந்தன. அடிமாலி அருகே மச்சிபிளாவ் குடிக்கு செல்லும் ரோடு சேதமடைந்து ஆபத்தாக உள்ளதால் மலைவாழ் மக்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.இம்மாவட்டத்தில் இதுவரை 148 வீடுகள் சேதம் அடைந்ததில் 10 வீடுகள் முழுமையாக சேதமடைந்தன. இதில் இடுக்கி தாலுகாவில் 55 வீடுகள் சேதமடைந்தன. அதில் 3 வீடுகள் முழுமையாக சேதமடைந்தன. பீர்மேடு தாலுகாவில் மிகவும் குறைவாக 11 வீடுகள் சிறிய அளவில் மட்டும் சேதமடைந்தன.

நீட்டிப்பு

இம்மாவட்டத்தில் இடுக்கி, தேவிகுளம், உடும்பன்சோலை தாலுகாக்களில் அமைக்கப்பட்ட 14 நிவாரண முகாம்களில் 240 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.சுற்றுலாவுக்கு விதிக்கப்பட்ட தடை, கொச்சி, தனுஷ்கோடி தேசிய நெடுஞ் சாலையில் 'கேப் ரோடு' வழியில் போக்குவரத்து தடை ஆகியவை நீடிக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை