பெரியாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 4 அடி உயர்வு - நீர்வரத்து 7 ஆயிரம் கன அடியை தாண்டியது
கூடலுார்:முல்லைப் பெரியாறு அணை நீர்ப் பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழையால் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 4 அடி உயர்ந்து 119.65 அடியை எட்டியது. அணைக்கு நீர்வரத்து 7 ஆயிரம் கன அடியை தாண்டியது.தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கடந்த நான்கு நாட்களுக்கும் மேலாக முல்லைப் பெரியாறு அணை நீர் பிடிப்புப் பகுதியில் கொட்டிவருகிறது. நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி தேக்கடியில் 105.6 மி.மீ., பெரியாறில் 101.6 மி.மீ., மழை பதிவானது. இதனால் 1648 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை வினாடிக்கு 5200 கன அடியாக அதிகரித்தது. நேற்று மழை மேலும் தீவிரமடைந்து நீர்வரத்து மாலை நிலவரப்படி 7800 கன அடியாக அதிகரித்தது. இதனால் 115.65 அடியாக இருந்த நீர்மட்டம் ஒரே நாளில் நான்கு அடி உயர்ந்து நேற்று மாலை 4:00 மணி நிலவரப்படி 119.65 அடியை எட்டியது (மொத்த உயரம் 152 அடி). தமிழகப் பகுதிக்கு குடிநீருக்கு 100 கன அடி திறக்கப்பட்டுள்ளது. நீர் இருப்பு 2285 மில்லியன் கன அடியாகும். தொடர் மழையால் நீர்மட்டம் 120 அடியை கடக்கும் வாய்ப்புள்ளது.இதனிடையே அணையில் முகாமிட்டுள்ள தமிழக நீர்வளத் துறையினர் ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை நீர்மட்ட அளவை கண்காணித்து வருகின்றனர்.