மேலும் செய்திகள்
மானாவாரி விதைப்புக்கு உரிய விதைகள் தயார்
25-May-2025
கம்பம்: கடந்த 3 ஆண்டுகளாக நிறுத்தி வைத்திருந்த இயந்திர நடவிற்கு வேளாண் துறை அனுமதி வழங்கி, கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர் வட்டாரங்களுக்கு 2 ஆயிரம் ஏக்கர் வரை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.கம்பம் பள்ளத்தாக்கில் முல்லைப் பெரியாறு பாசனத்தில் 14 ஆயிரத்து 707 ஏக்கர் இரு போக நெல் சாகுபடி செய்யப்படுகிறது. விவசாய பணிகளுக்கு தொழிலாளர் கிடைப்பதில் சிக்கல் இருந்தது. தமிழக வேளாண் துறை இயந்திர நடவு முறையை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்தது. ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக இந்த திட்டம் அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் இந்தாண்டு தற்போது கம்பத்திற்கு 880 ஏக்கர், சின்னமனூருக்கு 800 ஏக்கர், உத்தமபாளையத்திற்கு 400 ஏக்கரில் இயந்திர நடவு செய்ய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இது குறித்து கம்பம் துணை வேளாண் அலுவலர் குணசேகர் கூறுகையில், இயந்திர நடவு செய்ய ஒரு விவசாயிக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.4 ஆயிரம் பின்னேற்பு மானியமாக வழங்க உள்ளோம். குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்பு திட்டத்தில் இது நடைமுறைப்படுத்தப்படுகிறது. நாற்றங்காலை உழவு மட்டும் செய்து கொடுத்துவிட்டு, விதை நெல்லை கொடுத்தால் இயந்திரம் வைத்திருப்பவர்கள் அவர்களே நாற்றுகளை வளர்ந்து, நடவு செய்து கொடுத்து விடுவார்கள். இதன் மூலம் பயிர்கள் சீரான வளர்ச்சி, கூடுதல் மகசூல் கிடைக்கும். தொழிலாளர் தட்டுப்பாடு பிரச்னை இருக்காது என்றார். விரும்பும் விவசாயிகள் கம்பம், சின்னமனூர், உத்தமபாளையம் வேளாண் உதவி இயக்குநர் அலுவலகங்களை அணுக கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். டெல்டா அல்லாத மாவட்டங்களுக்கு இந்த அளவு ஒதுக்கீடு செய்தது இதுவே முதன் முறை என்று விவசாயிகள் வரவேற்றுள்ளனர்.
25-May-2025