| ADDED : பிப் 01, 2024 05:04 AM
கூடலுார் : தமிழக கேரள எல்லையில் உள்ள மங்கலதேவி கண்ணகி கோயிலுக்கு தமிழக வனப்பகுதி வழியாக தார் சாலை அமைக்க வலியுறுத்தி ஹிந்து சமய அறநிலைத்துறை அதிகாரியிடம் மனு கொடுத்தனர்.தமிழக கேரள எல்லையில் கூடலூர் அருகே விண்ணேற்றிப்பாறை மலை உச்சியில் அமைந்துள்ளது மங்கலதேவி கண்ணகி கோயில். ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமி தினத்தன்று மட்டும் விழா கொண்டாடப்படும். தமிழக கேரள பக்தர்கள் அதிக அளவில் கலந்து கொள்வார்கள். இக் கோயிலுக்கு செல்ல கேரள வனப் பகுதி வழியாக குமுளியிலிருந்து 14 கி.மீ., தூர ஜீப் பாதை உள்ளது. இது தவிர லோயர்கேம்ப் பளியன்குடியில் இருந்து 6.6 கி.மீ., தூரத்தில் தமிழக வனப்பகுதி வழியாக நடைபாதை உள்ளது.ஒவ்வொரு ஆண்டும் விழா நேரங்களில் பளியன்குடி வனப்பாதையை பக்தர்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். அதே வேளையில் நடக்க முடியாதவர்கள் கேரள வனப்பகுதி வழியாக ஜீப்பில் செல்கின்றனர். கேரள வனத்துறையினர் பல்வேறு கெடுபிடிகளை செய்வதால் தமிழக பக்தர்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதனால் தமிழக வனப்பகுதி வழியாக ஜீப் பாதை அமைத்து தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பக்தர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.இந்நிலையில் நேற்று பாரதிய கிசான் சங்க தலைவர் சதீஷ்பாபு, ஆர்.எஸ்.எஸ். தர்மஜாக்கரன் மாவட்ட தலைவர் தெய்வேந்திரன், முல்லைச் சாரல் விவசாய சங்க பொருளாளர் ஜெயபால் உள்ளிட்டோர் தேனி இந்து சமய அறநிலைத்துறை அதிகாரியிடம் மனு கொடுத்தனர்.அந்த மனுவில்:கண்ணகி கோயிலுக்கு பளியன்குடி, தெள்ளுக்குடி, சேத்துவாய்க்கால் வழியாக தார் சாலை அமைப்பதற்கு சர்வே பணிக்காக தமிழக அரசு ரூ. 20 லட்சம் ஒதுக்கீடு செய்தது. ஆனால் இதுவரை அதற்கான நடவடிக்கை எதுவும் இல்லை. இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடமும், அமைச்சரிடமும் மனு கொடுத்தோம். வரும் ஏப்ரலில் சித்ரா பவுர்ணமி விழா கொண்டாடுவதற்குமுன் தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.