| ADDED : ஜன 23, 2024 05:09 AM
தேனி: மேல்நிலை தொட்டி ஆப்பரேட்டர்கள், சுகாதார பணியாளர்கள் சம்பளம் வழங்க கோரி சி.ஐ.டி.யு., அமைப்பினர் கலெக்டரிடம் மனு வழங்கினர்.தேனி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஷஜீவனா தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் டி.ஆர்.ஓ., ஜெயபாரதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அபிதாஹனீப், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் இந்துமதி, கலெக்டர் நேர்முக உதவியாளர் முகமது அலிஜின்னா பங்கேற்றனர். பொதுமக்கள் 325 மனுக்களை கூட்டத்தில் வழங்கினர்.பெரியகுளம் தாலுகா இ.புதுக்கோட்டை ஊராட்சி கக்கன்ஜிநகரை சேர்ந்த நாச்சான் என்பவர் கலெக்டர் அலுவலகத்தில் இதற்கு முன் வழங்கிய மனுக்களை மாலையாக அணிந்து மனு கொடுக்க வந்தார். அவரது மனுவில், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அரசு வழங்கிய நிலத்தை சிலர் ஆக்கிரமித்து வைத்துள்ளனர். அவர்களிடமிருந்து இடத்தை மீட்டு பொதுமக்களுக்கு வழங்க வேண்டும். என்றிருந்தது.சி.ஐ.டி.யு., மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் வழங்கிய மனுவில், 'பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம் ஜி. கல்லுப்பட்டி ஊராட்சியில் பணிபுரியும் ஓ.எச்.டி., ஆப்பரேட்டர்கள், துாய்மைப்பணியாளர்களுக்கு 3 மாதங்களுக்கு மேல் சம்பளம் வழங்காமல் உள்ளது. அதே போல் பெரியகுளம் ஒன்றியத்தில் மற்ற ஊராட்சிகளில் பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய சம்பளத்தை பாக்கி இன்றி வழங்க கோரினர்.ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் கல்லுாரி சார்பில் வழங்கிய மனுவில், 'கல்லுாரி நுழைவாயில் முதல் கல்லுாரி விலக்கு வரை உள்ள ரோடு சேதமடைந்துள்ளது. இதனால் கல்லுாரி வாகனங்கள், மாணவிகள், பேராசிரியர்கள் சென்று வருவதில் சிரமம் உள்ளது. மேலும் அந்த ரோட்டில் வாகனங்களை இடையூராக நிறுத்துவது, மாணவிகள் கல்வியை பாதிக்கும் வகையில் அதிக சத்தத்தில் ஒலிபெருக்கி பயன்படுத்தப்படுகிறது. ரோடு அமைக்கவும், ஒலிபெருக்கி பயன்பாட்டைகட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க கோரினர்.