உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / குற்ற சம்பவங்களில் தொடர்புடையவர்களை கண்டுபிடிக்க இயலாமல் போலீசார் தவிப்பு

குற்ற சம்பவங்களில் தொடர்புடையவர்களை கண்டுபிடிக்க இயலாமல் போலீசார் தவிப்பு

மூணாறு : மூணாறில் கொலை உட்பட பல்வேறு குற்றச்சம்பவங்களில் தொடர்புடையவர்களை கண்டறிய இயலாமல் போலீசார் தவித்து வருகின்றனர். மூணாறு அருகே கல்லார் எஸ்டேட் புதுக்காடு டிவிஷனில் ஜெகநாதன் தனது மனைவி கீதா 28,வை 2011 மார்ச் 19ல் கொலை செய்து தப்பினார். கடலார் எஸ்டேட் ஈஸ்ட் டிவிஷனில் தோட்டத் தொழிலாளி தனசேகர் 38, திருட்டு தொடர்பாக விசாரணைக்கு பயந்து 2021 ஏப்ரல் 20ல் பணியின் இடையே மாயமானார். தமிழகத்தில் ஜெகநாதன், தனசேகர் ஆகியோர் தலைமறைவாக உள்ளதாக தெரியவந்தும் அவர்களை போலீசார் நெருங்க இயலவில்லை. கொலை: குண்டுமலை எஸ்டேட் பென்மூர் டிவிஷனில் குழந்தைகள் காப்பகத்தில் ஊழியர் ராஜகுரு 40, கடந்த 2017 பிப்.14ல் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அச்சம்பவத்தில் அவரது கணவர், மகன் ஆகியோரை போலீசார் கைது செய்த நிலையில் கொலைக்கு பயன்படுத்திய ஆயுதம், ராஜகுரு அணிந்திருந்த 10 பவுன் தங்க நகைகள் ஆகியவற்றை தாக்கல் செய்ய இயலாததால், குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்ய இயலவில்லை. அதேபோல் குண்டுமலை எஸ்டேட் அப்பர் டிவிடினில் எட்டு வயது சிறுமி 2019 செப்.9ல் வீட்டினுள் மர்மமான முறையில் இறந்தது.குழந்தை பாலியல் ரீதியில் துன்புறுத்தப்பட்டதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்தது. அச்சம்பவம் கொலை என வழக்கு பதிவு செய்து குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர். அதில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. கன்னிமலை எஸ்டேட், பாக்டரி டிவிஷனைச் சேர்ந்த ராஜபாண்டி 68, தனியார் ஏஜென்சி மூலம் செக்யூரிட்டியாக பணி யாற்றினார். அவர் சொக்கநாடு எஸ்டேட் தேயிலை பாக்டரியில் கடந்த ஆக.23ல் பணியில் ஈடுபட்டிருந்தபோது கொடூரமாக கொலை செய்யப்பட்டார். மூணாறு டி.எஸ்.பி., தலைமையில் 18 பேர் கொண்ட தனிப்படை போலீசார் விசாரித்து வரும் நிலையில் குற்றவாளிகள் குறித்து எவ்வித தகவலும் இல்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ