குற்றங்களை தடுக்க சிசிடிவி கேமரா அமைக்க கிராமசபையில் போலீசார் மனு
பெரியகுளம்: கீழவடகரை, எண்டப்புளி ஊராட்சிகளில் குற்றச் சம்பவங்களை தடுக்க கிராம சபை கூட்டத்தில் சிசிடிவி கேமரா அமைக்கக்கோரி சிறப்பு எஸ்.ஐ.,க்கள் மனு அளித்தனர். பெரியகுளம் ஒன்றியம், எண்டப்புளி ஊராட்சி கிராமசபை கூட்டம் முருகமலை நகரில் நடந்தது. மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முனிராஜ் தலைமை வகித்தார். ஊராட்சி செயலாளர் வீரபத்திரன், பா.ஜ., மாவட்ட தலைவர் ராஜபாண்டி, ஊர் பொதுமக்கள்பங்கேற்றனர். வடகரை போலீஸ் ஸ்டேஷன் குற்றப்பிரிவு ஏட்டு பால்பாண்டியன் மனு அளித்தார். அதில்,' பல்வேறு திருட்டு, ரேஸ் டூவீலரில் சென்று பெண்களை கிண்டல் செய்வது, மண் திருட்டு உட்பட பல்வேறு குற்றச்சம்பவங்களை தடுக்க எண்டப்புளி பிரிவு, எ.காமாட்சிபுரம் பிரிவு, நேருநகர் பிரிவு உட்பட 12 இடங்களில் ஊராட்சி நிர்வாகம் சிசிடிவி கேமரா அமைக்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார். கீழ வடகரை ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் ஒன்றிய அலுவலக உதவியாளர் ஜெயசீலன், ஊராட்சி செயலாளர் லெனின் ஆகியோரிடம் சிறப்பு எஸ்.ஐ.,க்கள் முத்தையா, தர்மராஜ் மனு அளித்தனர். இதில் 'ஸ்டேட் பாங்க் காலனி பிரிவு, அழகர்சாமிபுரம் புதுப்பாலம் உள்ளிட்ட 4 இடங்களில் 12 சிசிடிவி கேமராக்கள் அமைக்க வேண்டும்,' வலியுறுத்தினர்.