ரூ.35 லட்சம் மோசடியில் போலீஸ் திணறல்
பெரியகுளம்: மும்பை போலீஸ்காரர் லட்சுமணன் தம்னோ குரோடே 33, என்பவரிடம் ரூ. 35 லட்சம் மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளியான தேனி கருவேல்நாயக்கன்பட்டியை சேர்ந்த சேகர்பாபு, செந்தில் ஆகியோரை நெருங்க முடியாமல் போலீசார் திணறு கின்றனர். மஹாராஷ்டிரா, மும்பை பந்த்ரா காவல் கட்டுப்பாட்டு அறை போலீஸ்கார லட்சுமண்தம்னோ. இவரிடம் தேனியைச் சேர்ந்த சேகர்பாபு, செந்தில் ஆகியோர் பணம் இரட்டிப்பு செய்து ரூ. 2 ஆயிரம் நோட்டுகள் இரு மடங்கு தருவதாக கூறி ரூ.35 லட்சத்தை மோசடி செய்தனர். இவர்களுக்கு உடந்தையாக இருந்த ஆண்டிபட்டி அஜித்குமார், திண்டுக்கல் மாவட்டம், தோட்டனூத்து டிஸ்மிஸ் போலீஸ்காரர் நாக நாகேந்திரன் 33. அதே ஊரைச் சேர்ந்த ராம்குமார் 32 ,ஆகியோரை வடகரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து சுமார் ரூ.7 லட்சம் பணம் பறிமுதல் செய்ததுடன், நல்லகருப்பன்பட்டி வீட்டில் பதுக்கி வைத்திருந்த பல லட்சம் மதிப்பிலான கள்ள நோட்டுகளையும் போலீசார் கைபற்றினர். சம்பவம் நடந்து ஐந்து நாட்களாகியும் மீதி பணத்துடன் தப்பிய முக்கிய குற்றவாளிகளான சேகர்பாபு, செந்தில் மற்றும் இதில் தொடர்புடைய சுபாஷ், பார்த்திபனை போலீசார் தேடி வருகின்றனர். ரூ.35 லட்சம் பணம் பறிகொடுத்த லட்சுமணன் தம்னோ குராடே போலீஸ் ஸ்டேஷனுக்கு 'நடையாய் நடந்து' வருகிறார். ஆனால் இவ் வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை. வடகரை போலீசார் குற்றவாளிகளை கண்டுபிடிக்க கூடுதல் வியூகம் வகுக்க வேண்டும்.