| ADDED : நவ 18, 2025 04:38 AM
தேனி: ''விபத்துக்கள், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு குமுளி மலைப்பாதை வழியாக சென்று, கம்பம் மெட்டு வழியாக திரும்பும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.'' என, தமிழக போலீஸ் தரப்பில் கேரள அதிகாரிகளிடம் வலியுறுத்தப்பட்டு உள்ளது. தேனி வழியாக பக்தர்கள் சபரிமலைக்கு செல்கின்றனர். விபத்துக்களை தடுக்க ஆண்டுதோறும் ஒருவழிப்பாதை அமல்படுத்தப்படும். இதுவரை சபரிமலை செல்லும் பக்தர்கள் கம்பம் மெட்டு வழியாகவும், திரும்பும் பக்தர்கள் குமுளி வழியாகவும் சென்று வந்தனர். இந்தாண்டு விரைவில் ஒருவழிப் பாதையில் பக்தர்கள் வாகனங்கள் செல்ல நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. விபத்து, போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஒரு வழிப் பாதை மாற்றம் பற்றி போலீசார் கூறியதாவது: குமுளி மலைப் பாதையில் விபத்துக்களை தடுக்கவும், போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் பக்தர்களின் வசதிக்காக போக்குவரத்து மாற்றம் செய்ய இரு மாநில அதிகாரிகள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக சபரிமலை செல்லும் பக்தர்கள் குமுளி வழியாகவும், திரும்பும் பக்தர்கள் கம்பம் மெட்டு வழியாக வரும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக கேரள அதிகாரிகளிடமும் தமிழக அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர்., என்றனர்.