புலியை கூண்டு வைத்து பிடிக்காவிட்டால் ஜூலை 16ல் போராட்டம் அறிவிப்பு
மூணாறு : பழைய மூணாறு பகுதியில் நடமாடும் புலியை கூண்டு வைத்து பிடிக்காவிட்டால் ஜூலை 16ல் ரோடு மறியல் உட்பட பல்வேறு போராட்டங்கள் நடத்தப் போவதாக போராட்ட குழு உறுப்பினர்கள் தெரிவித்தனர்.மூணாறு ஊராட்சியில் 13ம் வார்டு பழைய மூணாறு நகர் பகுதியாகும். அங்கு பள்ளிகள், சுற்றுலா மையங்கள், தனியார் தேயிலை கம்பெனியின் பல்வேறு முக்கிய அலுவலகங்கள் உட்பட பல முக்கிய ஸ்தாபனங்கள் உள்ளன. தவிர தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கில் வசித்து வருவதுடன், அப்பகுதி வழியாக தினமும் ஆயிரக்கணக்கில் சுற்றுலா பயணிகள் சென்று வருகின்றனர்.நடமாட்டம்: அப்பகுதியில் கடந்த மாதம் இரண்டு முறை புலியின் நடமாட்டத்தை தொழிலாளர்கள் உட்பட பலர் நேரில் பார்த்தனர். அப்பகுதியில் ஆய்வு நடத்திய வனத்துறையினர் புலியின் நடமாட்டத்தை உறுதி செய்தனர்.அதனால் அதனை கூண்டு வைத்து பிடிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வனத்துறை அதிகாரிகளிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் வனவிலங்குகளிடம் இருந்து பொதுமக்களை பாதுகாக்குமாறு வலியுறுத்தி போராட்டங்கள் நடத்துவதற்கு வசதியாக மக்கள் பிரதிநிதிகள் உட்பட 170 பேர் கொண்ட போராட்ட குழுவை அமைத்தனர்.அக்குழுவைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பவ்யா, ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் ஜாக்குலின்மேரி, வார்டு உறுப்பினர் அஷ்டலெட்சுமி, காங்., மாவட்ட பொது செயலாளர் முனியாண்டி, எஸ்.ஐ.பி.டபிள்யூ. தொழிற்சங்க கன்வீனர் சுரேஷ் ஆகியோர் கூறியதாவது., 13ம் வார்டு பகுதியில் நடமாடும் புலியை வனத்துறையினர் 10 நாட்களுக்குள் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும். அல்லாத பட்சத்தில் ஜூலை 16ல் ரோடு மறியல், வனத்துறை அலுவலகம் முற்றுகை உட்பட பல்வேறு தீவிர போராட்டம் நடத்தப்படும், என்றனர்.