கழிவுநீர் செல்ல வழியின்றி புதர் மண்டிய சுகாதார வளாகம்
பெரியகுளம்: பெரியகுளம் தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள சுகாதார வளாகத்தில் கழிவுநீர் செல்ல வசதியின்றி புதர் மண்டியுள்ளது. இதனை பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.பெரியகுளம் தாலுகா அலுவலகம் நூற்றாண்டு பழமையானது. இத் தாலுகாவில் தென்கரை, தேவதானப்பட்டி இரு வருவாய் ஆய்வாளர் அலுவலகமும், தென்கரை பிட் 1, பிட் 2, முதல் வடவீர நாயக்கன்பட்டி வரை 22 வருவாய் கிராமங்கள், 18 வி.ஏ.ஓ.,க்கள் உள்ளன. பொதுமக்கள் வருமானம் இருப்பிடம் வாரிசு சிறு, குறு விவசாய சான்றிதழ், பட்டா மாறுதல், ரேஷன் கார்டு உட்பட பல்வேறு கோரிக்கைகளுக்காக தினமும் நூற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். ஜமாபந்தி நாட்களில் கூட்டம் அதிகளவில் இருக்கும். பெரியகுளம் தாலுகா அலுவலகம் மற்றும் வளாகம் முறையான பராமரிப்பு இன்றி உள்ளது. தொலைதூர கிராமங்களில் இருந்து வருபவர்களுக்கு தாலுகா அலுவலகத்தில் உட்காருவதற்கு கூட இருக்கைகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகள் இன்றி மக்கள் அவதிப்படுகின்றனர். தெரு நாய்கள் அலுவலகத்திற்குள் தடையின்றி வந்து செல்கின்றன. தாலுகா அலுவலக வளாகத்தில் பெரியகுளம் ஒன்றியம் 13 வது நிதி குழுவில் ரூ.7 லட்சம் செலவில் கட்டப்பட்ட சுகாதார வளாகத்தில் கழிவு நீர் செல்ல வசதி இன்றி பயன்பாடு இன்றி முடங்கியுள்ளது. இதனால் களைச் செடிகள் வளர்ந்து விஷ பூச்சிகள் தங்கும் இடமாக மாறி உள்ளது. இது பற்றி பொதுமக்கள் கருத்து: புதர்மண்டிய பூங்கா
பாபு, தென்கரை விவசாயிகள் சங்க செயலாளர், பெரியகுளம்: தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள பூங்காவில் பொதுமக்கள் உட்கார இருக்கை வசதி, வாகனம் நிறுத்தும் வசதிகள் இருந்தது. தற்போது பூங்கா பராமரிப்பு இன்றி முட்புதர்கள் வளர்ந்து உள்ளே நுழைய முடியாத வகையில் காடுபோல் உள்ளது. இதனை சீரமைத்து பொதுமக்கள் உட்காருவதற்கு இருக்கைகள் அமைத்து தர வேண்டும். தாலுகா அலுவலகத்தில் நுழைபவர்களை கண்காணிக்க கேமராக்கள் செயல்பாடில்லை. இதனால் தேவையில்லாத நபர்கள் அதிகளவில் சுற்றி திரிகின்றனர். இவர்களை கட்டுப்படுத்த வேண்டும். பாதாள சாக்கடை இணைப்பு வழங்க வேண்டும்
ரபீக் அகமது, சமூக ஆர்வலர், பெரியகுளம்: தாலுகா அலுவலக வளாகத்தில் சுகாதார வளாகம் இல்லாததால் அவதிப்படுகின்றனர். இயற்கை உபாதை கழிக்க அருகே எங்கும் செல்ல முடியாத நிலை உள்ளது. பெரியகுளம் நகராட்சி 22 வது வார்டில் இருக்கும் தாலுகா அலுவலகத்திற்கு நகராட்சி நிர்வாகம் தானாக முன்வந்து 200 மீட்டர் தொலைவில் உள்ள சுகாதார வளாகத்திற்கு பாதாளச்சாக்கடை இணைப்பு வழங்க வேண்டும். இந்த வளாகத்தில் சப்-கலெக்டர் குடியிருப்பு, பயணிகள் விடுதி உள்ளது. தாலுகா அலுவலகத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.