உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ராமக்கல் மெட்டு, சாக்குலுத்து மெட்டு ரோடு திட்டங்கள் வனத்துறை தொடர் முட்டுக்கட்டை

ராமக்கல் மெட்டு, சாக்குலுத்து மெட்டு ரோடு திட்டங்கள் வனத்துறை தொடர் முட்டுக்கட்டை

உத்தமபாளையம்,: கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக கோம்பை பகுதி மக்களின் கோரிக்கையாக இருந்து வரும் ராமக்கல் மற்றும் சாக்குலுத்து மெட்டு ரோடு திட்டங்களுக்கு வனத்துறை தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறது.கம்பம் பகுதியிலிருந்து கேரளாவிற்குள் செல்ல குமுளி மற்றும் கம்பமெட்டு ரோடுகள் உள்ளன. கம்பத்திலிருந்து கம்பமெட்டு வழியாக 13 கி.மீ. தூரமும், குமுளி வழியாக 20 கி.மீ.தூரமும் பயணிக்க வேண்டும். இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஏலத்தோட்டங்களுக்கு கம்பம் பகுதியிலிருந்து வாகனங்களில் விவசாயிகளும், தொழிலாளர்களும் சென்று வருகின்றனர்.

பாதியில் நிற்கும் ராமக்கல் மெட்டு ரோடு

கோம்பை, பண்ணைப்புரம், தேவாரம் பகுதிகளிலிருந்து அதிக எண்ணிக்கையில் தொழிலாளர்களும், விவசாயிகளும் செல்கின்றனர். கோம்பை பகுதியிலிருந்து ராமக்கல் மெட்டு, சாக்குலுத்து மெட்டு என கேரளாவிற்கு செல்ல இரண்டு ரோடு அமைக்கும் திட்டங்கள் நீண்ட காலத்திற்கு முன்பு அறிவிக்கப்பட்டது. ராமக்கல் மெட்டு ரோடு அடிவாரம் வரை போடப்பட்டது. அன்றைக்கு உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த மறைந்த குழந்தைவேலு இந்த திட்டத்தை துவக்கி வைத்தார். சில கி.மீ. தூரம் மட்டுமே வனப்பகுதிக்குள் செல்ல வேண்டும். அங்கு மரங்கள் எதுவும் இல்லை. அதே போன்று சாக்குலுத்து மெட்டு ரோடு திட்டமும் கிடப்பில் போடப்பட்டது. இரண்டு திட்டங்களுக்கும் வனத்துறை தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது .

அரசியல் வாக்குறுதி திட்டம்

சமீபத்தில் சாக்குலுத்து மெட்டு ரோடு திட்டம் பற்றி அரசியல்வாதிகள் அதிகம் பேசினர். முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் உறுதியாக நிறைவேற்றப்படும் என்றார். இப்போது தி.மு.க. அமைச்சர்களும் ஆய்வு நடத்தி சாக்குலுத்து மெட்டு ரோடு அமைக்கப்படும் என்றார்கள். ஆனால் இன்று வரை நடக்கவில்லை.

60 நிமிடத்தில் கேரளாவிற்கு செல்லலாம்

கோம்பை, பண்ணைப்புரம், தேவாரம் பகுதியில் உள்ள கிராமங்களை சேர்ந்தவர்கள் 30 முதல் 60 நிமிட நேரத்திற்குள் கேரளா செல்ல முடியும். மேலும் இங்கிருந்து காய்கறி, பல சரக்கு பொருள்கள் கொண்டு செல்லவும், அங்கிருந்து ஏலக்காய், மிளகு போன்ற வாசனை திரவிய பொருள்கள் இங்கு கொண்டு வரவும் எளிதாக இருக்கும். பயண நேரம், எரிபொருள் சிக்கனம் போன்ற அம்சங்களில் லாபம் இருக்கும். இந்த பாதையில் ஷெட்யூல் மர வகைகள் இல்லாத பகுதியாக இருப்பதால், வனத்துறை அனுமதி வழங்கலாம். ஆனால் வனத் துறை தொடர்ந்து இந்த இரு மாநில இணைப்பு ரோடு திட்டங்களுக்கு அனுமதி மறுத்து வருகிறது. இப்பகுதி பொதுமக்களின் நலன் கருதி இந்த இரண்டு ரோடு அமைக்கும் திட்டங்களையும் செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை