உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / செப்.18ல் வைகை அணையில் பாசன நீர் திறக்க பரிந்துரை

செப்.18ல் வைகை அணையில் பாசன நீர் திறக்க பரிந்துரை

ஆண்டிபட்டி:மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்களின் ஒருபோக பாசனத்திற்கு வைகை அணையில் இருந்து செப்.18ல் தண்ணீர் திறக்க தமிழக அரசுக்கு நீர்வளத்துறையினர் பரிந்துரை செய்துள்ளனர். பெரியாறு அணையின் நீர் வரத்தால் வைகை அணை நீர்மட்டம் ஆக. 14ல் 69.88 அடி வரை உயர்ந்தது (மொத்த உயரம் 71 அடி). ஏற்கனவே மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் முதல் போக பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து ஜூன் 15 முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டு, தற்போதும் தொடர்கிறது. அணை நீர்மட்டம் கடந்த சில வாரங்களாக 68 அடிக்கும் அதிகமாகவே உள்ளது. இந்நிலையில் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்களில் உள்ள ஒரு போக பாசன நிலங்களுக்கு தண்ணீர் திறக்க விவசாயிகள் வலியுறுத்துகின்றனர். இதனைத்தொடர்ந்து வைகை அணையில் இருந்து செப். 18ல் முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்க நீர்வளத் துறையினர் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளனர். அரசு உத்தரவு கிடைத்ததும் தண்ணீர் திறக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நீர் திறப்பால் இம்மாவட்டங்களில் உள்ள ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்று வைகை அணை நீர்மட்டம் 68.57 அடியாக இருந்தது. நீர் வரத்து வினாடிக்கு 732 கன அடி. பாசனம், குடிநீருக்காக வினாடிக்கு 669 கன அடி நீர் வெளியேறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ