தொற்றா நோய் பிரிவில் கூடுதல் பணியாளர்களை நியமிக்க கோரிக்கை
கம்பம் : தொற்றா நோய்களை கண்டறிந்து சிகிச்சையளிக்கும் பிரிவில் கூடுதல் நர்சுகள்,பணியாளர்களை நியமிக்க கோரிக்கை எழுந்துள்ளது.பலருக்கும் சர்க்கரை, ரத்த அழுத்தம் உலகை அச்சுறுத்தி வருகிறது. இந்த இரண்டையும் பொதுமக்களிடம் கண்டறிந்து சிகிச்சையளிக்க, அரசு மருத்துவமனைகளில் என்.சி.டி. எனப்படும் தொற்றா நோய் பிரிவு 10 ஆண்டுகளுக்கு முன் துவக்கப்பட்டது. ஒவ்வொரு மருத்துவமனையிலும் இரண்டு நர்சுகள் நியமிக்கப்பட்டு, மருத்துவமனைக்கு வரும் அனைவரும் பரிசோதித்து சர்க்கரை, ரத்த அழுத்தம் கண்டறியப்பட்டது. தொடர் பரிசோதனையும் செய்யப்பட்டது. ஆனால் 2019 ல் கொரோனாவால் 2021 க்குள் இந்தியா முழுவதும் நடத்தப்பட்ட சர்வே ஒன்றில் 3 கோடி பேர் புதிதாக சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் கண்டறிந்து கட்டுப்படுத்த என்.சி.டி. பிரிவை பலப்படுத்த மாநில மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சகம் முடிவு செய்தது. ஆனால் அதற்கான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை.இது தொடர்பாக மருத்துவமனை வட்டாரங்களில் விசாரித்த போது, என்.சி.டி. பிரிவை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. கூடுதல் நர்சுகள், பிரத்யேக லேப், தனியாக டாக்டர் என நியமிக்க உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் இதுவரை அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த என்.சி.டி. பிரிவிற்கு கூடுதல் பணியாளர்கள் நியமனம் செய்ய வேண்டும் என்றனர்.