கம்பமெட்டு ரோட்டில் ஆக்கிரமிப்பு அகற்றம் ஒத்திவைப்பு ரீசர்வே செய்ய ஆர்.டி.ஓ. உத்தரவு
கம்பம்: கம்பமெட்டு ரோட்டில் முழுமையாக ரீ சர்வே செய்து ஆக்கிரமிப்பை அகற்ற என உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. செய்யது முகமது கூறியதை தொடர்ந்து, நெடுஞ்சாலைத் துறையினர் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை ஒத்தி வைத்தனர்.கம்பத்திலிருந்து கேரளாவை இணைக்கும் முக்கிய ரோடாக கம்பமெட்டு ரோடு உள்ளது. ஒரு கி.மீ. தூரம் உள்ள இந்த ரோட்டின் இரண்டு பக்கங்களும் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளன. வர்த்தக நிறுவனங்கள், குடியிருப்புகளாக மாறி உள்ளன. இரு மாநில போக்குவரத்து நடைபெறும் இந்த ரோட்டில் ஆக்கிரமிப்புக்களை அகற்ற மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. குறிப்பாக 5 சர்வே எண்களில் உள்ள 20 வீடுகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் முடிவு செய்திருந்தனர்.இந்த ரோட்டில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்திற்கு மேற்கு பக்கம் 20 க்கும் மேற்பட்ட வீடுகளுக்கும், கடைகளுக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டது. திட்டமிட்டபடி நேற்று காலை போலீஸ் பாதுகாப்புடன் நெடுஞ்சாலைத் துறையினர் வந்தனர். அதிகாரிகள் வருவதற்கு முன்பே பலர் தாங்களாகவே ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொண்டனர்.இந்நிலையில் உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. செய்யது முகமது, 'முழுமையாக ரீ சர்வே செய்து, பாரபட்சமின்றி அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்ற,' கூறினார். ஆர்.டி.ஓ வின் வேண்டுகோளை ஏற்று ஆக்கிரமிப்பு அகற்றுவதை நெடுஞ்சாலைத் துறையினர் ஒத்தி வைத்தனர்.