காட்டு யானைகளிடம் தப்பிய பள்ளி மாணவர்கள், துாய்மை பணியாளர்கள்
மூணாறு: மூணாறில் துாய்மைப் பணியாளர்கள், பீர்மேட்டில் பள்ளி மாணவர்கள் ஆகியோர் காட்டு யானைகளிடம் இருந்து அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்.கொட்டாரக்கரை, திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பீர்மேடு அருகே மரியகிரி பகுதியில் உள்ள பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்து வீடு திரும்ப ரோட்டில் காத்திருந்தனர். அப்போது திடீரென காட்டு யானை மாணவ, மாணவிகளை நோக்கி பாய்ந்து வந்தது. அதனை பார்த்தவர்கள் பள்ளி வளாகம் உள்பட பல பகுதிகளில் சிதறி ஓடினர். தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் சென்ற வண்ணம் இருந்ததால் யானை ஓடி வந்த வேகம் சற்று தடைபட்டதால் மாணவ, மாணவிகள் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்.அதேபோல் மூணாறு அருகே கல்லார் எஸ்டேட் செல்லும் ரோட்டில் உள்ள ஊராட்சிக்கு சொந்தமான குப்பை சேமிப்பு கிடங்கில் 15 க்கும் மேற்பட்ட துாய்மைப் பணியாளர்கள் குப்பை தரம் பிரித்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத வகையில் திடீரென ஒற்றை கொம்பன் ஆண் காட்டு யானை பாய்ந்து வந்தது. அதனை பார்த்த துாய்மை பணியாளர்கள் அலறியடித்து, அங்குள்ள கட்டடத்திற்குள் நுழைந்து உயிர் தப்பினர். நீண்ட நேரம் கழிவுகளை தின்ற யானை, பின்னர் தாமாக காட்டிற்குள் சென்ற பிறகு, கட்டடத்தை விட்டு வெளியில் வந்தனர்.அங்கு இரண்டு மாதங்களுக்கு முன், இதே காட்டு யானை தாக்கி மூன்று துாய்மைப் பணியாளர்கள் பலத்த காயம் அடைந்தனர். அதில் அழகம்மாள் தற்போதும் சிகிச்சையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.