உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சுற்றுச்சூழல் மாசுபடுவதை தவிர்க்க மரக்கன்று நட்டு பராமரிப்பு

சுற்றுச்சூழல் மாசுபடுவதை தவிர்க்க மரக்கன்று நட்டு பராமரிப்பு

சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதற்கு பல காரணங்கள் இருந்தாலும் இவை அனைத்தையும் முறியடித்து தீர்வு கிடைப்பதற்கான ஒரே சாத்தியம் மரக்கன்றுகள் வளர்ப்பது மட்டுமே. அவை காற்றில் இருந்து வரும் துாசிகளை தடுக்கிறது. நிலத்தடி நீரை துாய்மைப் படுத்துவதில் மரங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. மரங்கள் வளர்ந்து மண் வளம் பாதுகாக்கப் பட்டாலே மனிதன் சுத்தமான காற்றை சுவாசிக்கலாம். எப்படி வேண்டுமானாலும் பொருளாதார வளர்ச்சி அடையலாம் என்பதை மாற்றி, சுற்றுச்சூழலை பாதிக்காத வளர்ச்சியாக இருக்க பசுமை கட்டடங்கள், பசுமைக் கொள்கை, தண்ணீர் பாதுகாப்பு, கழிவு மேலாண்மை ஆகியவற்றை பின்பற்ற வேண்டும். இவ்வாறான முன்முயற்சிகள் குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பயிற்சி அளிப்பது அவசியம். அந்த அறப்பணிகளை கூடலுாரில் உள்ள என்.எஸ்.கே.பி. மேல்நிலைப் பள்ளி நிர்வாகம் மாணவர்களுக்கும், சோலைக்குள் கூடலுார் அமைப்பு பொது மக்களுக்கும், மரக்கன்றுகள் வளர்ப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது

பி.கணேசன், தமிழ் ஆசிரியர், என்.எஸ்.கே.பி., மேல்நிலைப் பள்ளி, கூடலுார்: எங்கள் பள்ளியில் நாள்தோறும் தனியாக நேரம் ஒதுக்கி மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பது, மரங்கன்றுகள் வளர்ப்பதன் அவசியம், பிளாஸ்டிக் பயன்பாட்டால் மனிதனுக்கு ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். தண்ணீர் சேமிப்பின் அவசியம் குறித்தும் விளக்கி வருகிறோம். சுற்றுச்சூழல் குறித்த கல்வி தற்போதைய மாணவர்களுக்கு அவசியம் தேவைப்படுகிறது. அவர்களுக்கு தரும் கல்வி எதிர்கால சந்ததியினரை காப்பாற்ற பெரிதும் உதவும். மாணவர்கள் பள்ளியில் அதிக நேரம் இருக்கின்றார்கள். அந்த நேரத்தில் சுகாதாரம் குறித்த கல்வி பெரிதும் பயன்படும்., என்றார்.

சென்டர் மீடியனில் பூச்செடிகள்

சண்முகம், சோலைக்குள் கூடல் அமை ப்பு, கூடலுார்:சோலைக்குள் கூடல் அமைப்பில் தன்னார்வத் தொண்டு செய்யும் ஏராளமான மாணவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். விடுமுறை நாட்களில் மரக்கன்றுகள் நடுவது, நட்ட மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றுவது உள்ளிட்ட பணிகளை தொடர்ந்து செய்து வருகிறார்கள். கூடலுார் நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிக்காக வெட்டப்பட்ட மரங்களுக்கு பதிலாக மரக்கன்றுகள் நட வேண்டும் என்ற நோக்கில் நெடுஞ்சாலை ஓரத்தில் ஏராளமான மரக்கன்றுகளை நடவு செய்துள்ளோம். கடந்த சில நாட்களாக சென்டர் மீடியனில் பூச்செடிகள் வைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளோம். வீடுகளில் துளசிச்செடி கண்டிப்பாக வளர்க்க வேண்டும். இதில் கூடுதல் ஆக்சிஜன் உருவாகிறது. கடுமையான வெப்பத்தில் ஆக்சிஜன் குறைபாட்டால் சிரமம் அடையும் மக்களுக்கு துளசி அதிகம் பயன்படுகிறது. இயற்கை இருந்தும் நாம் இறப்பதற்கு காரணம், இயற்கை இறந்து கொண்டிருப்பதுதான். இதயம் இல்லாத இயற்கை, நம்மை வாழவைத்துக் கொண்டிருக்கிறது. இதயம் இருந்தும், நாம் ஏன் இயற்கையை அழித்துக் கொண்டு வருகிறோம். இயற்கையை பாதுகாத்தாலே மாசில்லா கூடலுாரை உருவாக்க முடியும்., என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ