ஆண்டிபட்டிக்கு ரூ.43 லட்சம் மதிப்பில் கழிவு நீர் உறிஞ்சும் வாகனம்
ஆண்டிபட்டி; ஆண்டிபட்டி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் தேங்கும் மழை நீர், கழிவு நீரை உறிஞ்சி அப்புறப்படுத்துவதற்கு புதிய வாகனம் ஒதுக்கப்பட்டுள்ளது.ஆண்டிபட்டி பேரூராட்சிக்குட்பட்ட சக்கம்பட்டி, ஆண்டிபட்டி, கொண்டமநாயக்கன்பட்டி மற்றும் விரிவாக்க பகுதிகளில் உள்ள 18 வார்டுகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வசிக்கின்றனர். மழைக்காலத்தில் குடியிருப்பு பகுதிகள், தெருக்கள், ரோடுகள், ரயில்வே சுரங்க பாலங்களில் தேங்கும் மழை நீரால் பலருக்கும் சிரமம் ஏற்படுகிறது. பல இடங்களில் கழிவு நீர் அப்புறப்படுத்த முடியாமல் தேங்குகிறது. தேங்கும் நீரை மோட்டார் மூலம் உறிஞ்சி அப்புறப்படுத்துவதில் பல சிரமங்கள் ஏற்படுகிறது. சிரமத்தை தவிர்க்கும் விதமாக ஆண்டிபட்டி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் தேங்கும் மழை நீர், கழிவுநீரை அப்புறப்படுத்துவதற்கு புதிய வாகனம் ஒதுக்கப்பட்டுள்ளது.பேரூராட்சி நிர்வாகத்தினர் கூறியதாவது: 'ஸ்வச் பாரத் மிஷன்' திட்டத்தில் ரூ.42.84 லட்சம் மதிப்பில் வாகனம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வாகனத்தில் 6000 லிட்டர் கொள்ளளவு டேங்கர் இணைக்கப்பட்டுள்ளது. மழைநீர் கழிவு நீரை இந்த டேங்கரில் உறிஞ்சி அப்புறப்படுத்த முடியும். ஆண்டிபட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பொதுக்கழிப்பறை செப்டிக் டேங்குகளை சுத்தப்படுத்துவதிலும் இந்த வாகனத்தை பயன்படுத்தலாம். வாகனம் விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். இவ்வாறு கூறினர்.