உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சாக்கடை கட்டுமான பணி 9 மாதங்களாக கிடப்பில் போடப்பட்ட அவலம் ஜெயமங்கலம் 6வது வார்டில் அடிப்படை வசதியின்றி குமுறல்

சாக்கடை கட்டுமான பணி 9 மாதங்களாக கிடப்பில் போடப்பட்ட அவலம் ஜெயமங்கலம் 6வது வார்டில் அடிப்படை வசதியின்றி குமுறல்

தேவதானப்பட்டி, : பெரியகுளம் ஒன்றியம், ஜெயமங்கலம் ஊராட்சி 6 வது வார்டில் சாக்கடை கட்டுமானப்பணி துவங்கி 9 மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.பெரியகுளம் ஒன்றியம், ஜெயமங்கலம் ஊராட்சி 6 வது வார்டில் 600 க்கும் அதிகமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த வார்டைச் சேர்ந்த ஊராட்சி உறுப்பினர் தேவி, ஊராட்சி துணைத் தலைவராக உள்ளார். இதனால் இந்த வார்டுக்கு அடிப்படை வசதிகள் கிடைக்கும் என வார்டு மக்கள் நினைத்ததற்கு மாறாக அடிப்படை வசதிகள் இன்றி மக்கள் தவிக்கின்றனர். இப்பகுதியில் வசிக்கும் சதீஷ், அழகு பாண்டி, முத்து சுப்பிரமணி, முத்துமணி, கணேசன் ஆகியோர் தினமலர் குடியிருப்போர் குரல் பகுதிக்காக கூறியதாவது:முனியாண்டி கோயில் தெருவில் நூற்றுக்கணக்கானோர் வசிக்கின்றோம். இப் பகுதியில் சாக்கடை கால்வாய் கட்டப்படாததால் கழிவுநீர் திறந்தவெளியில் செல்கிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவ்வப்போது காய்ச்சலால் பாதிக்கப்படுகிறோம். சாக்கடை வசதி செய்து தருமாறு ஒவ்வொரு கிராம சபையிலும் ஒன்றிய அலுவலகம், சப் கலெக்டர் அலுவலகத்தில் தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். இதன் பலனாக 15 வது நிதிக்குழு திட்டத்தில் ரூ. 3.70 லட்சம் மதிப்பீட்டில் சாக்கடை கால்வாய் அமைக்க 9 மாதங்களுக்கு முன்பு ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது.

பாதை வசதி யின்றி சிரமம்

இதற்காக குடியிருப்பு பகுதிகளில் இரு புறங்களிலும் பள்ளம் தோண்டப்பட்டது. என்ன காரணத்தினாலோ சாக்கடை கட்டும் பணி கிடப்பில் போடப்பட்டது. அங்கன்வாடி மையத்திற்கு 20 சிறுவர், சிறுமிகள் வந்து செல்கின்றனர். இப் பகுதியில் சாக்கடை தேங்கி உள்ளதால் கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கொசுக்கடியால் அவதிப்படுகின்றனர். அங்கன்வாடி மையத்திற்கு செல்வதற்கு முறையான பாதை வசதி இல்லாததால் சிமென்ட் தெரு உயரமாகவும், நடந்து செல்லும் பாதை தாழ்வாகவும், குப்பையாக உள்ளது. இதனால் சிறுவர்கள் அவர்களை அழைத்துச் செல்லும் பெற்றோர் அவதிப்படுகின்றனர். ஓரிரு மாதங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வருவதற்குள் துவங்கிய சாக்கடை கட்டுமான பணியை வேண்டும்.

வராக நிதியின் குறுக்கே பாலம் தேவை

பருவமழை காலங்களில் ஜெயமங்கலம் வராகநதியில் அதிகளவு தண்ணீர் செல்வதால் அக்கரையில் விளை நிலங்களுக்கு ஈடுபொருட்கள் கொண்டு செல்லவும், மகசூலை மார்க்கெட்டிற்கு எடுத்து வரவும் சிரமமாக உள்ளது. ஆற்றை கடக்கும் போது திடீரென விவசாயிகள் இழுத்துச் செல்லும் அபாய நிலை உள்ளது. வராக நதியின் குறுக்கே பாலம் கட்டுவதற்கு ஊராட்சி நிர்வாகம், பொதுப்பணித் துறையினரிடம் கோரிக்கை வைக்க வேண்டும். அரசு மேல்நிலைப் பள்ளியில் சுற்றுச்சுவர் கட்டப்பட்ட நிலையில் நுழைவு கேட் போடப்படாததால் இரவு நேரங்களில் மது குடிப்பவர்கள் பள்ளி வளாகத்தை மதுபாராக மாற்றுகின்றனர். விரைவில் கேட் போடவேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ