| ADDED : ஜன 19, 2024 05:42 AM
தேனி: கத்தரி, மிளகாய் சாகுபடி செடிகளில் இலைச்சுருட்டல் நோய் பாதிப்பு அதிகரித்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதனால் விளைச்சல் பாதிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.தேனி மாவட்டத்தில் தோட்டக்கலைப்பயிர்கள் அதிகம் சாகுபடி செய்யப்படுகிறது. மாவட்டத்தில் கத்திரி 450 எக்டேர், மிளகாய் 360 எக்டேர் தற்போது பயிரிடப்பட்டுள்ளது. இவற்றில் தலா 100 எக்டேரில் அறுவடைப்பணிகள் நடந்து வருகிறது. அறுவடை செய்யப்பட்ட காய்கறிகள் தேனி நாகலாபுரம், சின்னமனுார், தேவாரம் மார்க்கெட்கள் மூலம் வெளி மாவட்டங்கள், மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.தற்போது மிளகாய், கத்தரி செடிகளில் நுனிப்பகுதியில் இலைசுருட்டு நோயால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நோயினால் பூக்கள் உதிர்வது தொடர்கிறது. இதனால் விளைச்சல் பாதிப்பதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கத்தரி செடியில் இலைகள் சிறிய அளவில் மாறுகின்றன. பெரிய அளவில் உள்ள இலைகள் மஞ்சளாக மாறுகின்றன. மாவட்டத்தில் இந்த இரு பயிர்கள் பயிரிடப்பட்டுள்ள பெரும்பாலான வயல்களில் இந்த அறிகுறிகள் தென்படுகின்றன. மருந்து தெளித்தாலும் நோய்பாதிப்பு தொடர்வதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.தோட்டக்கலைத்துறையினர் கூறுகையில், கத்தரி, மிளகாய் செடிகளில் சாறு உறுஞ்சும் பூச்சிகளால் இவ்வகை இலைச்சுருட்டல் ஏற்பட்டுள்ளது. மழைகாலம் நிறைவு பெற்றதால் மண், செடிகள், இலைகளில் ஈரப்பதம் அதிகம் உள்ளது. இதனால் இலைகளில் உள்ள சாறுகளை இப்பூச்சிகள் உறுஞ்சுவதால் இலைச்சுருட்டல் ஏற்படுகிறது. விவசாயிகள் தோட்டக்லை அலுவலர்களிடம் ஆலோசனை பெற்று செடிகளில் ஊடுறுவி பூச்சிகளை தாக்க கூடிய மருந்துகளை பயன்படுத்தினால் பூச்சிகளை கட்டுப்படுத்தலாம் என்றனர்.