இலவசமாக இறைச்சி தராததால் கடைக்காரருக்கு அதிர்ச்சி வைத்தியம்
தேனி : இலவசமாக இறைச்சி வழங்காத கடை உரிமையாளரை மிரட்ட, சுடுகாட்டில் இருந்து சிதைந்த பிணத்தை தோண்டி எடுத்து வந்து, கடை முன் வீசிய போதை ஊழியரிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.தேனி, பழனிசெட்டிப்பட்டி பஸ் நிறுத்தம் அருகே மணியரசன் என்பவர் இறைச்சிக்கடை வைத்துள்ளார். கடையில் குமார், 45, பணிபுரிந்தார். சுடுகாட்டில் உடல்களை அடக்கம் செய்யும் பணியிலும் அவர் ஈடுபட்டு வந்தார்.நேற்று காலை இறைச்சி கடைக்கு போதையில் சென்ற குமார், 'இலவசமாக கறி வேண்டும்' என, கத்தினார். கடையில் இருந்தவர்கள் அவரை திட்டி அனுப்பினர். ஆத்திரமடைந்த குமார் சுடுகாட்டிற்கு சென்றார்.அங்கு, சில மாதங்களுக்கு முன் அடக்கம் செய்யப்பட்ட பெண்ணின் உடலை தோண்டி எடுத்தார். முற்றிலும் சிதைந்த நிலையில் இருந்த உடலை, தன் தலையில் வைத்து சுமந்தபடி நடந்து வந்த அவர், இறைச்சி கடை முன் பிணத்தை வீசினார். இதனால் கடைக்கு வந்தவர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். சிலர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் குமாரை பிடித்து விசாரித்தனர். போலீசார் கூறுகையில், 'இச்சம்பவம் தொடர்பாக தகவல் கிடைத்ததும் பழனிசெட்டிபட்டி பேரூராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தோம். 'உடலை மீண்டும் மயானத்திற்கு கொண்டு செல்ல பணியாளர்களை அனுப்ப கோரினோம். பேரூராட்சி சார்பில் ஒத்துழைப்பு வழங்கவில்லை. நாங்களே அழுகிய உடலை எடுத்து, மீண்டும் அடக்கம் செய்யும் நிலை ஏற்பட்டது' என்றனர்.