குறிஞ்சியப்பன் குளத்தில் கருவேல மரங்களால் நீர் தேங்காத அவலம் ஆக்கிரமிப்பால் சிலமலை விவசாயிகள் பரிதவிப்பு
போடி: போடி அருகே குறிஞ்சியப்பன்குளம் பராமரிப்பு இல்லாததால் சீமைக்கருவேல மரங்களாக வளர்ந்து மழைநீரை முழுவதுமாக கண்மாயில் தேக்க முடியாமல் விவசாயிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.போடி அருகே சிலமலை தெற்கு பகுதியில் 13 ஏக்கர் பரப்பளவில் அமைந்து உள்ளது குறிஞ்சியப்பன் குளம். மழைக் காலங்களில் பெய்யும் மழை, 18ம் கால்வாய் நீர் தேவாரம் சின்னதேவி குளம் நிரம்பி, கோணம்பட்டி கருப்பசாமி கோயில் கண்மாய், நாகலாபுரம் ஓடை வழியாக ராசிங்கபுரம் கவுண்டன்குளதிற்கு வந்தடைகிறது. இங்கு இருந்து 18 ம் கால்வாய் வழியாக தண்ணீர் குறிஞ்சியப்பன் குளத்திற்கு வந்தடையும். இக் குளத்தில் நீர் நிரம்புவதன் மூலம் 200 ஏக்கர் நேரடியாகவும், 100 ஏக்கர் மறை முகமாக பாசன வசதி பெறும். குறிஞ்சியப்பன் குளத்திற்கு வரும் நீர்வரத்து பாதையை தனி நபர்கள் ஆக்கிரமித்து உள்ளனர். இதனால் நீர்வரத்து ஓடை இருக்கும் இடம் தெரியாத அளவிற்கு மாறி உள்ளது. முட்புதர்கள் அதிகம் உள்ளதால் குளத்தில் மழை நீரை முழுமையாக சேமிக்க முடிவதில்லை. இதனால் விளைநிலங்களில் நீரை தேக்கவும், கிணறுகளில் நீர்மட்டம் உயராததால் விவசாயிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். தற்போது சீமைக்கருவேல மரங்களாக வளர்ந்து உள்ளதால் மழைக் காலங்களில் கண்மாய்க்கு வரும் மழை நீரை முழுமையாக தேக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. 18ம் கால்வாய் நீரை கொண்டு வர வேண்டும்
ஜெயராஜ், விவசாயி, சிலமலை: கோணாம்பட்டி கருப்பசாமி கோயில் கண்மாய், ராசிங்காபுரம் கவுண்டன் குளம் வழியாக 18ம் கால்வாய் நீரானது சிலமலை குறிஞ்சியப்பன் குளதிற்கு வந்தடையும். இதற்கான நீர் வரத்து பாதையை தனி நபர்கள் ஆக்கிரமித்துள்ளனர். கனமழை பெய்தாலும் குளத்தில் நீரை தேக்காததால் விவசாயத்திற்கு தேவையான நீர் கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது. 18 ம் கால்வாய் நீர் இரு ஆண்டுகளாக திறந்து விடாததால் நீர்வரத்து இன்றி சிரமம் அடைகின்றனர். சீமைக் கருவேல மரங்கள் வளர்ந்து கண்மாய் மேடாகவும், வரத்து வாய்க்கால் பள்ளமாக மாறி உள்ளன. மடைகள் மாயமாகும் நிலையில் தனி நபர்கள் ஆக்கிரமித்து உள்ளனர். நீர்வரத்து பாதை ஆக்கிரமிப்பு அகற்றி, சீமைக் கருவேல மரங்களை அகற்றி தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். 18ம் கால்வாய் திட்டத்தில் கண்மாய்க்கு நீர் வர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சீமைக் கருவேல மரங்களால் நிலத்தடி நீர் பாதிப்பு
அய்யாத்துரை, விவசாயி, சிலமலை : இக்கண்மாயில் நீர் தேங்குவதன் மூலம் 300 ஏக்கருக்கு மேல் பாசன வசதி பெறும். ராசிங்காபுரம் மந்தைகுளம் நீர்வரத்து ஓடைப்பகுதி ஆக்கிரமிப்பில் உள்ளதால் கண்மாய்க்கு நீர் வருவதில் சிக்கல் உள்ளது. இதோடு வரத்து வாய்க்கால் பகுதி ஆக்கிரமிப்பில் உள்ளதால் மழைநீர் குளத்திற்கு வருவது இல்லை. கண்மாய் தூர்வாரப்பட்டு 25 ஆண்டுகளுக்கு மேலானதால் சீமைக் கருவேல மரங்களாக உள்ளது. இதனால் மழைக் காலங்களில் வரும் நீரை கூட கண்மாயில் தேக்க முடியாத நிலை உள்ளது. சீமைக் கருவேல மரங்களால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கிணறுகளின் நீர் இன்றி வறண்டுள்ளது. குடிமராமத்து திட்டத்தில் கண்மாய்க்கு நீர் வரும் பாதை, கண்மாயில் வளர்ந்துள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.