உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கூடலுார் புறவழிச்சாலையில் சீரமைப்பு பணியில் மெத்தனம் வாகன விபத்து அபாயம்

கூடலுார் புறவழிச்சாலையில் சீரமைப்பு பணியில் மெத்தனம் வாகன விபத்து அபாயம்

கூடலுார்: கூடலுார் புறவழிச்சாலையில் பள்ளத்தை சீரமைப்பதற்கான பணிகள் துவங்கி 20 நாட்களுக்கு மேலாகியும் மெத்தனம் காட்டுவதால் விபத்து அபாயம் உள்ளது. கூடலுார் வடக்கு போலீஸ் ஸ்டேஷனில் இருந்து தெற்கு மந்தை வாய்க்கால் வரையுள்ள புறவழிச் சாலை 4 கி.மீ., தூரம் கொண்டதாகும். மாநில நெடுஞ்சாலை சந்திக்கும் பகுதியை ஒட்டியுள்ள புறவழிச் சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டது. சாலை அமைப்பதற்கு முன்பு அப்பகுதியில் கிணறு இருந்துள்ளது. 20 நாட்களுக்கு முன்பு சீரமைப்பு பணிகள் துவங்கியது. வாகனங்கள் கூடலுார் நகர்ப் பகுதியில் உள்ள மாநில நெடுஞ்சாலை வழியாக செல்ல அறிவுறுத்தப்பட்டது. நான்கு நாட்கள் மட்டும் சீரமைப்பு பணிகளை மும்முரமாக செய்த தேசிய நெடுஞ்சாலை துறையினர் தொடர்ந்து கிடப்பில் போடப்பட்டு மெத்தனம் காட்டியுள்ளனர். புறவழிச்சாலையில் பணிகள் நடைபெறுவதால் வாகனங்கள் மாற்று வழியில் செல்ல எச்சரிக்கை போர்டு வைக்காமல் லாரியை மட்டும் ரோட்டின் குறுக்கே நிறுத்தியுள்ளனர். இரவு நேரத்தில் நீண்ட தொலைவில் இருந்து வேகமாக வரும் வாகனங்கள் அருகில் வந்தவுடன் லாரி நிற்பதை அறிந்து திடீர் பிரேக் போடுகின்றனர். இதனால் விபத்து அபாயம் அதிகம் உள்ளது. அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன் சீரமைப்பு பணிகளை முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி