| ADDED : ஜூலை 27, 2011 10:39 PM
தேனி : ரேஷன் கடையில் முறைகேடு செய்து இலவச அரிசி கடத்தியதாக 19 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். ஒருவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். ஏழு பேர் கடத்தல் தடுப்பு பிரிவில் கைதாகி உள்ளனர். ஆனாலும் கடத்தல் குறையவில்லை. தேனி மாவட்டம், கேரள மாநில எல்லையோரம் உள்ளதால் இங்கிருந்து கேரளாவிற்கு தாராளமாக அரிசி கடத்தல் நடக்கிறது. கம்பம் மெட்டு, குமுளி, போடி மெட்டு சோதனை சாவடிகளில் உள்ள அலுவலர்கள் அரிசி கடத்தல் பற்றி தெரிந்தும் கண்டுகொள்வதில்லை. அதேபோல் தாலுகாக்களில் உள்ள வழங்கல் அலுவலர்களும் கடத்தலுக்கு எதிராக பெரிய அளவில் நடவடிக்கை எடுக்கவில்லை.
இது குறித்து உளவுப்பிரிவு போலீசார் அரசுக்கு தகவல் கொடுத்தனர். அரசு உத்தரவின் பேரில் ஜூன் 5ம் தேதிக்கு பிறகு கலெக்டர், மாவட்ட வழங்கல் அலுவலர், கூட்டுறவு இணைப்பதிவாளர் தலைமையில் தனிப்படை களத்தில் இறங்கியது. அரிசி அறவை ஆலைகள் தணிக்கை செய்யப்பட்டன. இலவச அரிசி அரைத்த இரண்டு மில்கள் சீல் வைக்கப்பட்டன. சின்னமனூரில் 1780 லிட்டர் மண்ணெண்ணெய் பதுக்கி வைத்திருந்த அபுதாகீர் என்பர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார். பல இடங்களில் சோதனை நடத்தி 13 டன் அரிசி, 2580 லிட்டர் மண்ணெண்ணெய், 18 சிலிண்டர்கள் பணிமுதல் செய்யப்பட்டன. கடத்தலில் ஈடுபட்ட ஏழு பேர், 10 வாகனங்கள் ஏழு கழுதைகள் பறிமுதல் செய்யப்பட்டன. முறைகேடுகளில் ஈடுபட்ட 19 விற்பனையாளர்கள் கைது செய்யப்பட்டனர். இவ்வளவு நடவடிக்கை எடுக்கப்பட்ட பின்னரும் இன்னமும் அரசு பஸ்களில், தனியார் வாகனங்களில் கேரளாவிற்கு இலவச அரிசி கடத்தப்படுவது தொடர்கிறது. இதனால் மாவட்ட நிர்வாகம் தனது நடவடிக்கையினை மேலும் விரைவுபடுத்த வேண்டும்.