உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / குப்பை கொட்டும் இடமாக மாறிய வெட்டுக்காடு சீகநதிக் குளம்

குப்பை கொட்டும் இடமாக மாறிய வெட்டுக்காடு சீகநதிக் குளம்

கூடலுார் : கூடலுார் அருகே வெட்டுக்காடு சீகநதிக் குளம் பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்புகளை அகற்றி சீரமைக்காததால் குப்பை கொட்டும் இடமாக மாறியுள்ளது.கூடலுார் அருகே வெட்டுக்காடு சீகநதிக் குளம் 14 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இதன் மூலம் 200 ஏக்கர் வரை பாசனப்பரப்பு இருந்தது. நீர்த்தேக்க பகுதிகளில் புளிய மரங்கள், இலவ மரங்கள் என தனியாரால் ஆக்கிரமிப்பில் உள்ளது. கம்பம் ஊராட்சி ஒன்றிய கட்டுப்பாட்டில் உள்ள இக்குளத்தை சீரமைக்க அதிகாரிகள் முன்வராததால் பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ளது. கன மழை பெய்து தண்ணீர் தேங்கிய போதிலும் அதனை விவசாய நிலங்களுக்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. கரையில் தண்ணீர் திறந்துவிடும் ஷட்டர் காட்சி பொருளாக உள்ளது. தற்போது குளம் என்பதற்கான அடையாளமே இல்லாமல் மாயமாகியுள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் தயக்கம் காட்டுவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.இக்கு குளத்திற்கு மேம்பாட்டு பணிகளுக்காக 2022ல் ரூ.12 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் தற்போது வரை ஒப்பந்ததாரர் எவ்வித பணிகளையும் மேற்கொள்ளவில்லை எனவும் புகார் இருந்தது. இப் புகாரின் அடிப்படையில் 2023 அக்டோபரில் அதிகாரிகள் நேரடி கள ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ள ஊராட்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் இருந்து தகவல் அனுப்பப்பட்டது. ஆனால் இதுவரை எவ்விதமான சீரமைப்பு பணிகளும் நடத்தவில்லை. இதனால் வெட்டுக்காடு, இந்திரா நகரில் சேகரமாகும் குப்பை அனைத்தும் கொட்டும் இடமாக மாறியுள்ளது.இதேபோல் மேற்கு தொடர்ச்சி அடிவாரப் பகுதியில் உள்ள கடமான்குளம், புதுக்குளம், சடையன் குளம், வெயில் அடிச்சான் குளம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட குளங்கள் விவசாய ஆக்கிரப்புகளால் மாயமாகியுள்ளன. அனைத்து குளங்களும் சீரமைக்கப்பட்டு தண்ணீரை தேக்கி வைத்தால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயரும், பாசன நிலங்களும் பயன்பெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை