தேனியில் ஆக்கிரமிப்பு அகற்றுவதில் அலட்சியம் நெரிசலால் தவிக்கும் மாவட்ட தலைநகர்
தேனி: மாவட்டத்தின் தலைநகராக விளங்கும் தேனியில் நாளுக்கு நாள் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருவதால் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் அவதியடைகின்றனர். தேனி மாவட்டத்தின் முக்கிய நகரமாக விளங்குகிறது. தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் கேரளாவில் இருந்தும் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு செல்பவர்கள் தேனி வழியாக செல்கின்றனர். இது தவிர மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வர்த்தகம், வேலை, படிப்பிற்காக தினமும் 20ஆயிரத்திற்கும் அதிகமானோர் வந்து செல்கின்றனர். ஆனால், தேனி நகர்பகுதியில் ரோட்டோர ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகின்றன. இதனால் பாதசாரிகள் நடந்து கூட செல்ல முடியாத நிலை உள்ளது. நகர் பகுதியில் ரோட்டோர ஆக்கிரமிப்புகள் மாநில நெடுஞ்சாலை, தேசிய நெடுஞ்சாலை, நகராட்சி என மூன்று நிர்வாகங்களின் கீழ் வருகின்றன. இதனால் நடவடிக்கை எடுப்பதில் அதிகாரிகள் ஒருங்கிணைப்பு இல்லை. போதிய பணியாளர்கள் இல்லை என மூன்று துறை அதிகாரிகளும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் இருந்து பின்வாங்குகின்றனர். சில நேரங்களில் போலீசாராலும் நெரிசலை கட்டுப்படுத்த முடியவில்லை. நகர்பகுதியில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் மாவட்ட நிர்வாகம் தலையிட வேண்டும். ஆக்கிரமிப்புகளை நிரந்தரமாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.