உணவு, தண்ணீருக்காக வனத்தை விட்டு வனவிலங்குகள் பயிர்களை சேதப்படுத்துவதாக விவசாயிகள் புலம்பல்
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி வனச்சரகத்தில் வன விலங்குகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் உணவு, தண்ணீருக்காக வனத்தை விட்டு வெளியேறி பயிர்களை சேதப்படுத்துகிறது. இதனால் தடுப்பணைகள், கசிவுநீர் குட்டை கூடுதலாக அமைக்க வேண்டும்.ஆண்டிபட்டி வனச்சரகத்திற்குட்பட்ட கணவாய் மலையில் துவங்கி திம்மரசநாயக்கனூர், புள்ளிமான்கோம்பை, வேலப்பர் கோயில் பகுதி வரை 4 ஆயிரம் எக்டேரில் பரந்து விரிந்த வனப்பகுதியாக உள்ளது. கணவாய் மலை, டி.சுப்புலாபுரம், புள்ளிமான் கோம்பை, திம்மரசநாயக்கனூர் பகுதி மலைகளில் கரடி, காட்டுப்பன்றி, கேளைஆடு போன்ற வன விலங்குகள் அதிகம் உள்ளன. மலையை ஒட்டி வனத்துறை காப்பு காடுகள் அதிகம் இல்லை. மலை அடிவாரத்தில் பட்டா நிலங்கள் விவசாய நிலங்களாக உள்ளன. மலைப்பகுதியில் இருந்து இறங்கி வரும் வனவிலங்குகள் விளை நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதாக விவசாயிகள் புகார் கூறுகின்றனர். வனப்பகுதியில் வன விலங்குகளுக்கு தேவையான உணவு, தண்ணீருக்கு தட்டுப்பாடு ஏற்படுவதால் அவை தரைப்பகுதிக்கு இறங்குகின்றன. வன விலங்குகள் தன் போக்கில் சுற்றி திரிந்து மீண்டும் மலைக்கு சென்று விடும். காப்புக்காடுகள் தரைப்பகுதியில் இல்லாததால் விளைநிலங்களை சேதப்படுத்துகிறது. விழிப்புணர்வு அவசியம்
வனச்சரகர் அருண்குமார் கூறியதாவது: ஆண்டிபட்டி வனச்சரகத்தில் கரடிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வனவிலங்குகளின் தண்ணீர் தேவைக்காக பல இடங்களில் தடுப்பணைகள், கசிவு நீர் குட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட சில பகுதிகளில் புள்ளிமான்கள், கேளை ஆடுகள் அதிகம் உள்ளன. இப்பகுதியில் புலிகள் வந்து சென்றதற்கான தடயங்கள் இல்லை. யானைகள் கணக்கெடுப்பு மட்டும் தொடர்கிறது. கணவாய் மலைப்பகுதியில் 3000-க்கும் மேற்பட்ட பழ மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. ஏத்தக்கோவில் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொடுக்காப்புளி, நாவல், விளாம்பழம், மூங்கில் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் யானைகள் இறங்கி வருவதை தடுக்க மூன்று மீட்டர் அகலத்தில் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு அகழி அமைக்க திட்ட மதிப்பீடு தயாரித்து அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. வனப்பகுதியை ஒட்டிய கிராமங்களில் கரடி நடமாட்டம் குறித்த அச்சம் நிலவுகிறது. மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இங்கு விவசாய நிலங்களுக்கு மாலை,அதிகாலையில் தனியாக செல்வதை தவிர்க்க வேண்டும். தற்காப்பு நடவடிக்கைகளை தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்றார்.