| ADDED : பிப் 25, 2024 05:13 AM
போடி, : கோடை காலத்தில் வனப்பகுதியில் காட்டு தீ ஏற்படுவதை தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கையாக போடிமெட்டு மலைப்பாதையில் காய்ந்துள்ள புல்வெளிகளை அகற்றி தீ தடுப்பு பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.போடி முந்தலில் இருந்து 17 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட மலைப் பகுதியை கடந்து 22 கி.மீ., மலைப்பாதையில் சென்றால் தமிழக எல்லை போடிமெட்டு உள்ளது. இப்பகுதியில் 800 ஏக்கருக்கு மேல் வனப்பகுதி அமைந்துள்ளது.வனப்பகுதியில் மரங்களுக்கு சமூக விரோத கும்பல் தீ வைத்து வருவது வழக்கமாக கொண்டுள்ளனர். கால்நடை மேய்ப்பவர்கள் தீ வைத்து வருகின்றனர். சிலர் டூவீலர் உள்ளிட்ட வாகனங்களில் செல்பவர்கள் சிகரெட், பீடி குடித்து விட்டு அணைக்காமல் வீசிவிட்டு செல்கின்றனர். இதனால் பரவும் காட்டு தீயால் பல ஏக்கரில் உள்ள விலை உயர்ந்த மரங்கள், மூலிகை செடிகள் எரிந்து சேதமாகின்றன. வன உயிரினங்கள் பலியாவதுடன் இடம் பெயரும் நிலை தொடர்கிறது. தவிர்க்கும் வகையில் போடி ரேஞ்சர் நாகராஜ் தலைமையில் வனவர்கள் அன்பரசு, கனிவர்மன், பிரகாஷ் உள்ளிட்ட வனத்துறையினர் போடி முந்தலில் துவங்கி 12 கி.மீ., தூரம் உள்ள புலியூத்து வரை போடிமெட்டு மலைப் பாதையின் இருபுறமும் காய்ந்து கிடக்கும் கோரை புல்வெளிகள், செடிகளை அகற்றி தீ வைத்து அணைத்து தீ தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.