|  ADDED : மார் 17, 2024 06:33 AM 
                            
                            
                         
                         
                     
                        
                              
                           
                        
                          
                                                      
தேனி:  தேனி மாவட்டத்தில் லோக்சபா தேர்தலை அமைதியாகவும், வெளிப்படையாகவும், பாரபட்சம் இன்றி நடத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு ஏற்பாடுகளை செய்து நேற்று மாலை முதல் களப்பணிகளை துவக்கியது.தேனி லோக்சபா தொகுதியில் ஆண்டிப்பட்டி, போடி, பெரியகுளம்(தனி), கம்பம், சோழவந்தான்(தனி), உசிலம்பட்டி உள்ளிட்ட 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன. தேனி  லோக்சபா தேர்தல் நடத்தும் அலுவலர் தேனி கலெக்டர் ஷஜீவனா தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ளார்.  சட்டசபை தொகுதி வாரியாக உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக  ஆண்டிப்பட்டி- கலால் உதவி ஆணையர் ரவிச்சந்திரன், பெரியகுளம் -ஆர்.டி.ஓ., முத்துமாதவன், கம்பம் -உத்தமபாளையம் ஆர்.டி.ஓ., தாட்சாயினி, போடி - மாவட்ட வழங்கல் அலுவர் சாந்தி, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி -ஆர்.டி.ஓ., ரவிச்சந்திரன், சோழவந்தான் -மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலர் முத்து கிருஷ்ணன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.  நேற்று மாலை முதல் தேர்தல் நடத்தை விதிகள் மாவட்டத்தில் அமலுக்கு வந்தது. தேர்தல் கண்காணிப்பு பணியில் சட்டசபை தொகுதி வாரியாக பறக்கும் படை, நிலைக்குழு, வீடியோ பதிவு குழு  என 7 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு குழுவில் 3 அலுவலர்கள், 3 போலீசார் இடம் பெறுவர். நான்கு தொகுதிகளிலும் 31 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு  அலுவலர்களுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் தலைமையில் பயிற்சி வழங்கப்பட்டது. இப் பயிற்சியில் ஒட்டுக்காக அரசியல் கட்சிகள் கொடுக்கும் பணம், பரிசு பொருட்கள்  பறிமுதல் செய்தால் அவற்றை தேர்தல் ஆணையத்தின்   இ.எஸ்.எம்.எஸ்., செயலியில் பதிவேற்ற அறிவுறுத்தப்பட்டது. இதில் ஆண்டிப்பட்டி தொகுதியில் மட்டும் ஒவ்வொரு பிரிவிலும் கூடுதலாக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.    இக்குழுக்கள் 24 மணிநேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர். கலெக்டர் அலுவலகத்தில் இருந்தே  மாநில, மாவட்ட சோதனை சாவடிகளை  நவீன கேமராக்கள் பொறுத்தப்பட்டு கண்காணிக்கின்றனர்.தேனி லோக்சபா தொகுதியில் 16.12 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். தேனி மாவட்டத்தில்  மட்டும் 11.12 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். லோக்சபா தொகுதியில் மொத்தம் 1788 ஓட்டுச்சாவடிகள் தயார் செய்யப்பட்டுள்ளன. இதில் 353 ஓட்டுச்சாவடிகள் பதற்றமானதாக கண்டறியப்பட்டுள்ளது.