தேனி மூதாட்டி கொலை: மதுரையில் வாலிபர் சரண் 12 பவுன் நகைகள் பறிமுதல்
கடமலைக்குண்டு:தேனி மாவட்டம் கண்டமனூர் அருகே மரிக்குண்டில் வட்டிக்கு பணம் வாங்கும் பிரச்னையில் மூதாட்டி பவுன்தாயை 60, கொலை செய்த வழக்கில் உறவினர் அருண் 26, மதுரை நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரிடமிருந்து 12 பவுன் நகைகளை போலீசார் மீட்டனர்.மரிக்குண்டிலுள்ள பாழடைந்த கிணற்றில் செப்., 13 ல் பவுன்தாய் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். கிணற்றிலிருந்து உடலை மீட்ட போலீசார் விசாரித்தனர். இரண்டு நாட்களுக்கு முன் இதில் தொடர்புடைய பழனித்தேவன்பட்டி ரமேஷ் மகன் அருண் 26, மதுரை நீதிமன்றத்தில் சரணடைந்தார். போலீசார் அவரை காவலில் எடுத்து விசாரித்தனர். போலீசார் கூறியதாவது: அருண் தேனியில் வியாபாரம் செய்து வருகிறார். வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்ய உறவினரான பவுன்தாயிடம் வட்டிக்கு பணம் கேட்டார். பணம் இருப்பில் இல்லாததால் நகைகளை கொடுக்க மூதாட்டி சம்மதித்துள்ளார். ஆனால் நகைகளை அருணிடம் நேரடியாக வழங்காமல் அவரது குடும்ப உறவினர்கள் மூலம் கொடுக்கவும் சம்மதித்துள்ளார். இதனால் அதிருப்தியுற்ற அருண் டூவீலரில் பவுன்தாயை அழைத்து செல்லும் போது ஊருக்கு ஒதுக்குப்புறம் நகைகளை பறித்து கொண்டு கழுத்தை நெரித்து கொலை செய்து கிணற்றில் தள்ளியுள்ளார் என்றனர். பிறகு அருண் தேனி தேக்கம்பட்டி சிறையில் அடைக்கப்பட்டார்.