டாப்ஸ்டேஷன் சுகாதார வளாகம் ஏலத்தில் விட வலியுறுத்தல்
போடி : சுற்றுலா தலமான டாப் ஸ்டேனில் சுகாதார வளாக பராமரிப்பை ஏலம் மூலம் மகளிர் சுய உதவி குழுவிடம் ஒப்படைக்க ஊராட்சி நிர்வாகம் முன் வர வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.போடி ஒன்றியம், கொட்டகுடி ஊராட்சிக்கு உட்பட்டது டாப் ஸ்டேஷன் மலைக் கிராமம். 60க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மூணாறு செல்லும் சுற்றுலா பயணிகள் தினமும் 200 க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். இங்கு கொட்டகுடி ஊராட்சி மூலம், சுகாதார வளாகம் கட்டப்பட்டு உள்ளது. சுகாதார வளாகத்தை பராமரிப்பு செய்ய சுற்றுலா பயணிகளிடம் குறைந்த கட்டணமாக ஊராட்சி மூலம் வசூல் செய்யப்பட்டன. ஊராட்சி தலைவர் பதவி முடிந்த நிலையில் தற்போது தனி நபர் மூலம் கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படுகின்றன. தினமும் ரூ.1500 முதல் ரூ. 2000 வரை மாதம் ரூ. பல ஆயிரம் வசூல் ஆகிறது. இதனால் ஊராட்சிக்கு ரூ. பல ஆயிரம் வருமான இழப்பு ஏற்படுகிறது. சுகாதார வளாக கட்டணம் வசூல் செய்யும் உரிமம் தனி நபருக்கு விடுவதை காட்டிலும், ஊராட்சிக்கு வருமானம் கிடைக்கும் வகையில் ஊராட்சி மூலமோ அல்லது ஏலம் விட்டு மகளிர் குழுவிடம் ஒப்படைக்க வேண்டும் என மகளிர் சுய உதவி குழுவினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.