போக்குவரத்து நெரிசலில் சிக்கி சுற்றுலா பயணிகள் அவதி
மூணாறு: மூணாறில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி சுற்றுலா பயணிகள் வழக்கம் போல் தவித்தனர். மூணாறில் வார விடுமுறை, பண்டிகை, கோடை சீசன் ஆகிய நாட்களில் பயணிகள் வருகை அதிகரித்து போக்குவரத்து நெரிசல் கடுமையாக ஏற்பட்டு வருகிறது. அதில் சுற்றுலா பயணிகள், பொது மக்கள் ஆகியோர் சிக்கி பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதற்கு தீர்வு காண அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் முன்வருவது இல்லை. தற்போது கிறிஸ்துமஸ், புத்தாண்டு தொடர் விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். அதனால் கடந்த 5 நாட்களாக மூணாறு நகர் உள்பட சுற்றுலா பகுதிகள், கொச்சி, தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை, மாட்டுபட்டி, உடுமலைபேட்டை ரோடுகள் ஆகியவற்றில் போக்குவரத்து நெரிசல் கடுமையாக ஏற்பட்டு வாகனங்கள் பல கி.மீ., தொலைவிற்கு அணிவகுத்து நின்றன. இந்நிலை தினமும் இரவு 10:00 மணி வரை நீடித்தது. இபாஸ் முறை: நெரிசலை தவிர்க்கும் வகையில் தற்காலிக தீர்வாக இ - பாஸ் முறையை நடைமுறைபடுத்த வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை. எம்.எல்.ஏ. ராஜா கூறுகையில், 'மூணாறில் போக்குவரத்து நெரிசல் தொடர்ந்த வண்ணம் உள்ளதால், அதற்கு தீர்வு ஏற்படுத்தும் வகையில் இ-பாஸ் முறையை நடைமுறை படுத்துவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்படும்,' என்றார்.