18ம் கால்வாயில் முன்கூட்டியே தண்ணீர் திறக்க அரசுக்கு கடிதம் எழுத வேண்டும் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் நீர்வளத்துறைக்கு டி.ஆர்.ஓ., உத்தரவு
தேனி: கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கூட்டுறவு, கனிமவளம், பொதுப்பணித்துறை மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை விவசாயிகள் முன்வைத்தனர். 18 ம் கால்வாயில் ஆக.,ல் தண்ணீர் திறக்க கோரி அரசுக்கு கடிதம் எழுது மாறு நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு டி.ஆர்.ஓ., உத்தரவிட்டார். இக்கூட்டத்திற்கு கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தலைமை வகித்தார். டி.ஆர்.ஓ., மகாலட்சுமி, வேளாண் இணை இயக்குநர் சாந்தாமணி முன்னிலை வகித்தனர். கண்ணன், விவசாயி சங்கம், தேனி: குள்ளப்புரத்தில் ஏற்கனவே 8 குவாரிகள், கிரஷர்கள் உள்ளன. இந்நிலையில் புதிதாக இரு குவாரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதனால் அப்பகுதியில் வாழை, உள்ளிட்ட பயிர் சாகுபடி பாதிக்கப்படுகிறது. குவாரி அனுமதி வழங்குவதில் விதிமுறைகள் பின்பற்றப்படுவது இல்லை. புதிதாக குவாரிகள் அமைக்ககூடாது. கலெக்டர்: பெரியகுளம் சப் கலெக்டர் தலைமையில் கனிம வளத்துறையினர், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தினர் ஆய்வு நடத்தி நாளை (இன்று) அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். ஜெயராஜ், வருஷநாடு: வாலிப்பாறை வருஷநாடு இடையே ரோடு அமைக்க வேண்டும். இதற்காக வனத்துறையினர் கட்டணம் செலுத்த கூறினர். அதனை செலுத்தி விட்டோம். ஆனால், இதுவரை ரோடு அமைக்கவில்லை. வனத்துறையினர்: நபார்டு அனுமதிக்காக காத்திருக்கிறோம், என்றனர். மாரிமுத்து, தேவாரம்: தேவாரத்தில் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தில் கடன் வாங்கி, மீண்டும் செலுத்தி விட்டேன். ஆனால், அதற்காக வழங்கிய நில ஆவணங்களை வழங்க மறுக்கின்றனர். பல்வேறு விவசாயிகள்: 18 ம் கால்வாயில் தண்ணீர் திறப்பிற்கு முன் துார்வார வேண்டும். முன்கூட்டியே தண்ணீர் திறக்க வேண்டும். நீர்வளத்துறை அதிகாரிகள்: 18 ம் கால்வாய் துார்வார அரசு ரூ.12 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டுள்ளது. விரைவில் துார்வாரும் பணிகள் துவங்கும். ஆண்டு தோறும் அக்.2ல் 18 ம் கால்வாயில் தண்ணீர் திறக்க உத்தரவு உள்ளது. டி.ஆர்.ஓ.,: முல்லைப்பெரியாறு அணை, வைகை அணை உள்ளிட்டவற்றில் நீர் இருப்பு உள்ளது. எனவே வரும் ஆண்டுகளில் ஆக.,ல் 18 ம் கால்வாயில் தண்ணீர் திறக்க கோரிக்கை விடுத்து, அரசுக்கு கடிதம் அனுப்புங்கள்., என்றார். ராஜா, விவசாயி, மார்க்கையன்கோட்டை: எங்கள் பகுதியில் செங்குளம் 40 ஏக்கரில் அமைந்துள்ளது. அதில் ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளன. துார்வார அரசு ரூ.4.98 கோடி ஒதுக்கி உள்ளது. பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். சீனிராஜ், விவசாயி, கொடுவிலார்பட்டி: எங்கள் பகுதியில் உள்ள தனியார், அரசு என 4 பார்கள் செயல்படுகின்றன. கால்நடை மருந்தகத்தில் சுற்றுச்சுவர் இல்லை. இதனால் அந்த பகுதி திறந்த வெளி பாராக மாறி வருகிறது. நடவடிக்கை எடுக்க வேண்டும். துரைராஜ், விவசாயி, அல்லிநகரம்: அல்லிநகரம் நகர் பகுதியில் வருவதால் பிரதமரின் விவசாயிகளுக்கான கிஷான் உதவித் தொகை உள்ளிட்டவை பெறுவதில் சிக்கல் நீடிக்கிறது. வளர்மதி, கலெக்டர் நேர்முக உதவியாளர்: தேனி அல்லிநகரம், சின்னமனுார் நகராட்சி பகுதிகளில் விவசாயிகளுக்கு பி.ஆர்.எஸ்.,எண் வழங்க முடியவில்லை. இதனால் இந்த பிரச்னை உள்ளது. ஆனால், தற்போது சில விவசாயிகளுக்கு பி.எம்., கிஷான் திட்டத்தில் பதிவேற்றம் செய்து உதவித்தொகை வழங்கப்படுகிறது. கண்ணன், விவசாயி, சிலமலை: எங்கள் பகுதியில் உள்ள வரத்தான் குளத்திற்கு 18 ம் கால்வாயில் இருந்து தண்ணீர் கொண்டு வர விவசாயிகள் இணைந்து கால்வாய் அமைத்தோம். ஆனால், தண்ணீர் கொண்டு வருவதில் சிக்கல் நீடிக்கிறது. தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.