சபரிமலை செல்லும் வாகனங்கள் கம்பம் மெட்டு வழியாக செல்ல உத்தரவு நெரிசலை தவிர்க்க போக்குவரத்து மாற்றம்
தேனி,:சபரிமலை செல்லும் வாகனங்கள் டிச.,20 முதல் 2025 ஜன.,15 வரை கம்பம் மெட்டு வழியாக செல்ல வேண்டும். தரிசனம் முடித்து திரும்பும் வாகனங்கள் குமுளி வழியாக வர தேனி கலெக்டர் ஷஜீவனா உத்தரவிட்டுள்ளார்.தமிழகம், கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து வரும் ஐயப்ப பக்தர்கள் அதிகளவில் தேனி மாவட்டம் வழியாக சபரிமலை செல்கின்றனர். இவர்கள் தேனி, கம்பம், கூடலுார், குமுளி மலைப்பாதை, வண்டிபெரியாறு வழியாக எருமேலி, சபரிமலை செல்கின்றனர். மண்டல பூஜை டிச.,26ல் நடக்கிறது.அதைத்தொடர்ந்து 2025 ஜன.,ல் மகரஜோதி தரிசனம் நடக்கிறது.இதற்காக பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது.இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க டிச.,20 முதல் 2025 ஜன.,15 வரை சபரிமலை செல்லும் வாகனங்கள் தேனி, கம்பம்மெட்டு, கட்டப்பனை,ஏலப்பாறை, குட்டிக்கானம் வழியாக எருமேலி, சபரிமலை செல்லவேண்டும். திரும்பும் வாகனங்கள் குட்டிக்கானம், பீர்மேடு, வண்டிபெரியாறு, குமுளி, கூடலுார் வழியாக வர வேண்டும். இந்த வழித்தடத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ளது என கலெக்டர் தெரிவித்துள்ளார்.