கழிவுநீர் கலந்த குடிநீர் சப்ளை கிராம மக்கள் பாதிப்பு
கூடலுார்: கூடலுார் நகராட்சி குடியிருப்புக்களில் இருந்து வெளியேறும் கழிவு நீரால் கருநாக்கமுத்தன்பட்டி கிராம மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.இந்நகராட்சியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் முழுவதும் முல்லைப் பெரியாற்றில் கலக்கிறது. கலக்கும் இடத்திற்கு அருகில் கருநாக்கமுத்தன்பட்டி ஊராட்சிக்கு குடிநீர் சப்ளை செய்வதற்கான உறைகிணறு உள்ளது. கழிவு நீர் கலந்த தண்ணீரை குடிநீருக்காக சப்ளை செய்வதால் கிராம மக்கள் பாதிப்பிற்கு உள்ளாகி வந்தனர். இதனை தடுப்பதற்காக ஊராட்சித் தலைவர் மொக்கப்பன் முல்லைப் பெரியாற்றின் கரைப் பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனு கொடுத்திருந்தார். இதற்காக கூடலுார் நகராட்சியில் இருந்து கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதை அமைப்பதற்கான இடம் தேர்வு செய்வதில் இழுபறி ஏற்பட்டது. இந்நிலையில் நகராட்சியில் ஒதுக்கப்பட்ட நிதி வீணானது. மீண்டும் நகராட்சியில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ஆனால் இதுவரை சுத்திகரிப்பு நிலையம் அமைக்காததால் முல்லைப் பெரியாற்றில் கழிவுநீருடன் கலந்து வரும் தண்ணீரை கிராம மக்கள் குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பல்வேறு தொற்று நோய்கள் ஏற்பட்டு கிராம மக்கள் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர். மீண்டும் பரிசீலனை செய்து உடனடியாக சுத்திகரிப்பு நிலையம் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்துகின்றனர்.