கணவரை அடித்து கொலை செய்த மனைவி, மகன் கைது
உத்தமபாளையம்: தேனி மாவட்டம் பண்ணைப்புரம் அருகே பல்லவராயன் பட்டியில் மது குடித்துவிட்டு தினமும் வீட்டில் தகராறு செய்த தர்மரை 57, மனைவி சந்திரா 54, மகன் அஜித் 27 ஆகிய இரு வரும் இணைந்து கட்டை யால் தாக்கி கொலை செய்தனர். மனைவி மகன் இருவரையும் கோம்பை போலீசார் கைது செய்தனர். பண்ணைப்புரம் அருகே உள்ள பல்லவ ராயன்பட்டி அழகர் மலையான் தெரு கூலி தொழிலாளி தர்மர் 57. இவருடைய மனைவி சந்திரா 54. கம்மங்கூழ் தயாரித்து வியாபாரம் செய்து வந்தார். இத்தம்பதிக்கு மகன் அஜித் 27, உள்ளார். தர்மர் தினமும் குடித்து விட்டு வந்து வீட்டில் தகராறு செய்வது வழக்கம். கடந்த சில வாரங்களாக சபரிமலைக்கு மாலை அணிந்து விரதம் இருந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன் சபரிமலைக்கு சென்று, வீடு திரும்பி உள்ளார். நேற்று முன்தினம் இரவு 10:00 மணியளவில் வழக்கம் போல், மது குடித்துவிட்டு வீட்டில் மனைவியுடன் தகராறு செய்தார். மனைவியும், மகனும் பொறுமை இழந்தனர். வீட்டில் இருந்த கட்டையை எடுத்து தர்மரை தாக்கினர். ரத்த வெள்ளத்தில் சரிந்த தர்மரை, அப்படியே போட்டு விட்டு வீட்டுக்குள்ளேயே அம்மாவும், மகனும் செய்வ தறியாது அமர்ந்தனர். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சத்தம் கேட்டு, வீட்டிற்குள் வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக கோம்பை போலீசாருக்கு தகவல் தரப்பட்டது. போலீசார் வந்து உடலை கைப்பற்றி உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை வழக்கில் சந்திரா, அஜித் கைது செய்யப்பட்டனர்.