கழிவு நீர் செல்ல வழியின்றி தேங்குவதால் நகராட்சியை முற்றுகையிட்ட பெண்கள்
கம்பம்: சாக்கடை கழிவு நீர் செல்ல வழியின்றி தெருவில் தேங்கியதை கண்டித்து பெண்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். கம்பம் நகராட்சி ஆங்கூர் பாளையம் ரோட்டின் 5 வது குறுக்கு தெருவில் விவேகானந்தர் தெரு உள்ளது. 200 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ள இப் பகுதியில் சாக்கடை கழிவு நீர் செல்ல வழியில்லை. இந்த தெருவிற்கு கீழ்புறம் தனியார் பட்டா நிலம் உள்ளதால் கழிவு நீர் செல்ல அவர்கள் அனுமதிக்கவில்லை. இதனால் இந்த தெருவில் உள்ள 200 வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர், தெருவின் கடைசியில் உள்ள காலி இடத்தில் நிரம்பி குளம் போல் தேங்கியது. அந்த இடத்தின் உரிமையாளர் சில நாட்களுக்கு முன்பு மண் கொட்டி மெத்தி கழிவு நீர் தேங்க வழியில்லாமல் செய்தார். இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர், வெளியேற வழியில்லாததால், வீடுகளுக்கு முன்பே தேங்கியது. கடந்த 20 ஆண்டுகளாக இப் பிரச்னையில் நகராட்சி நடவடிக்கை எடுக்க வில்லை. சமீபத்தில் நடந்த முகாமில் இப் பகுதி மக்கள் வழங்கிய மனுவிற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் தனிப்பிரிவில் இருந்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. நகரமைப்பு அலுவலர், பணியாளர்கள் சம்பந்தப்பட்ட தெருவை பார்க்க வந்த போது அங்கிருந்த பெண்கள் கோபமாக பேசியதால் அதிகாரிகள் சென்று விட்டனர். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்களும், ஆண்களும் நகராட்சியை முற்றுகை யிட்டனர். முற்றுகையிட்ட பெண்களிடம் நகராட்சி கமிஷனர் உமாசங்கர் பேசினார். அப்போது 'கழிவுநீர் செல்ல வழியில்லாததால் தொற்று நோய்கள் பரவி வருகிறது. பல முறை மனு கொடுத்தும் பலனில்லை. வீட்டு வரி குடிநீர் வரி செலுத்துகின்றோம். ஆனால் அடிப்படை வசதி செய்து தர மறுக்கிறீர்கள்,' என பெண்கள் கேள்வி எழுப்பினர். பதிலளித்த கமிஷனர், தனியார் பட்டா இடத்தின் உரிமையாளருடன் நான் பேசி உங்கள் பிரச்னையை தீர்க்க முயற்சி செய்கிறேன் என்றார் பின் கலைந்து சென்றனர்.