முகாமிற்கு வந்த ஆர்.டி.ஓ.,வை முற்றுகையிட்ட பணியாளர்கள்
கூடலுார்: வருங்கால வைப்பு நிதி திட்டத்திற்கு பிடித்தம் செய்த தொகையை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கூடலுாரில் நடந்த முகாமிற்கு வந்த ஆர்.டி.ஓ., வை நகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் முற்றுகையிட்டனர்.கூடலுார் நகராட்சியில் 21 வார்டுகளில் ஒப்பந்த அடிப்படையில் 35க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள் உள்ளனர். இவர்களுக்கு தினக்கூலியாக ஒப்பந்ததாரர் மூலம் ரூ.400 வழங்கப்பட்டு வருகிறது. இவர்களிடம் ஒப்பந்த நிறுவனம் வருங்கால வைப்பு நிதிக்காக மாதந்தோறும் குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்பட்ட தொகை மற்றும் நிறுவனம் செலுத்த வேண்டிய தொகை பல ஆண்டுகளாக பணியாளர்களுக்கு வழங்கவில்லை. இதனைப் பெற்றுத் தர நகராட்சி அதிகாரிகளுக்கும், மாவட்ட அதிகாரிகளுக்கும் பலமுறை மனு கொடுத்தும் பயனில்லை. இதனால் ஒப்பந்த பணியாளர்கள் கடந்த 25 நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில் நேற்று காய்கறி மார்கெட் அருகே தனியார் திருமண மண்டபத்தில் நடந்த 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமை பார்வையிட வந்த உத்தமபாளையம் ஆர்.டி.ஓ., சையது முகமதுவை ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் முற்றுகையிட்டு மனு வழங்கினர். உடனடியாக சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்பதாக உறுதி அளித்ததால் அனைவரும் கலைந்து சென்றனர்.