மேலும் செய்திகள்
தேனியில் அதிக ஒலியுடன் டூவீலர்கள் ஓட்டி இடையூறு
21-Sep-2025
தேனி: தேனியில் நேற்று மதியம் விதிகளை மீறி சில இளைஞர்கள் டூவீலர் பந்தயத்தில் ஈடுபட்டனர். இதனால் மற்ற வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்பட்டது. மாவட்டத்தில் தேனியில் பெரியகுளம் ரோடு எப்போதும் போக்குவரத்து நிறைந்து பரபரப்பாக காணப்படும் ரோடுகளில் ஒன்றாகும். இந்த ரோட்டில் தேனியில் குறிப்பிட்ட பகுதியில் இருந்து அன்னஞ்சி விலக்கு வரை சில இளைஞர்கள் டூவீலர் பந்தயம் நடத்துவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். அதிவேகமாக இயக்கும் வகையிலும், ஒலி அதிகம் எழுப்பும் வகையிலும் டூவீர்களை வடிவமைத்து கொள்கின்றனர். இந்த டூவீலர்களை பயன்படுத்தி பந்தயத்தில் ஈடுபடுகின்றனர். நேற்று மதியம் சில இளைஞர்கள் பந்தயத்தில் ஈடுபட்டு அதி வேகமாக டூவீலர்களை பெரியகுளம் ரோட்டில் ஓட்டினர். இதனால் அல்லிநகரம், தேனி நகர் பகுதியில் ரோட்டில் சென்ற மற்ற வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். பந்தயம் நடத்தும் பகுதி தேனி, அல்லிநகரம் என இரு போலீஸ் ஸ்டேஷன்களின் எல்லைகளுக்குள் வருகிறது. இதனால் யார் நடவடிக்கை எடுப்பது என்கிற இழுபறி நீடிக்கிறது. விபத்து தேனி எம்பெருமாள் கோயில் அருகே நேற்று காலை இளைஞர் அதிவேகமாக ஓட்டிச்சென்ற டூவீலரால் விபத்து ஏற்பட்டது. விபத்தில் மற்றொரு டூவீலரில் சென்ற கணவன், மனைவி காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இம்மாதிரியான விபத்துக்களை தவிர்க்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
21-Sep-2025