திருநெல்வேலி:திருநெல்வேலியில், பணி நிமித்தமாக நாங்குநேரி வந்த போலீஸ்காரர், அரசு பஸ்சில் டிக்கெட் எடுக்க மறுத்ததால், கண்டக்டருடன் வாக்குவாதம் ஏற்பட்டது.விருதுநகரைச் சேர்ந்தவர் ஆறுமுகபாண்டி, 35. சென்னையில் ஆயுதப்படை போலீஸ்காரராக பணியாற்றுகிறார். சென்னை புழல் சிறையில் இருந்து ஒரு கைதியை, திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி கிளைச் சிறைக்கு அழைத்து வந்திருந்தார்.அந்த கைதியை நாங்குநேரி கிளைச் சிறையில் ஒப்படைத்த பின், நேற்று முன்தினம் மாலையில் திருநெல்வேலி சென்று, சென்னை செல்ல திட்டமிட்டார். நாகர்கோவிலில் இருந்து நாங்குநேரி வழியாக திருநெல்வேலி சென்ற அரசு பஸ்சில், நாங்குநேரி கிளைச் சிறை முன் ஏறினார். அப்போது அவர் சீருடையில் இருந்தார். வழக்கமாக சென்னையில் பணி நிமித்தமாக செல்லும்போது, போலீசாரிடம் பஸ்சில் டிக்கெட் கேட்பதில்லை. அதேபோல, பணியில் இருந்ததால் டிக்கெட் எடுக்க ஆறுமுகபாண்டி மறுத்தார். ஆனால் அரசு பஸ் கண்டக்டர், வாரன்ட் எனப்படும் போலீஸ் ஸ்டேஷன் முன் அனுமதி கடிதம் வேண்டும் அல்லது டிக்கெட் எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.மேலும், அதை தன் அலைபேசியில் வீடியோவாக, கண்டக்டர் பதிவு செய்தார். மற்ற பயணியர் கேட்டுக் கொண்டபடி போலீஸ்காரர் டிக்கெட் எடுக்க சம்மதித்தார். இருப்பினும் அரசு பஸ் கண்டக்டர் தரப்பில் எடுக்கப்பட்ட அந்த வீடியோ, சமூக வலைதளத்தில் பரவியது. 'போலீசார் சீருடையில் அந்தந்த மாவட்டங்களில் பணி நிமித்தமாக செல்லும்போது, டிக்கெட் எடுக்கத் தேவையில்லை. கோர்ட் உள்ளிட்ட நீண்ட துாரம் செல்லும்போது, சம்பந்தப்பட்ட ஸ்டேஷன்களில் வாரன்ட் கடிதத்துடன் செல்ல வேண்டும்' என்பதும் உத்தரவாக உள்ளது. எனவே, நேற்றைய சம்பவம், போக்குவரத்து துறைக்கும், போலீசாருக்கும் இடையே மோதல், நெருடலை ஏற்படுத்தி உள்ளது.
இலவச பயணம் கிடையாது
'அரசு பஸ்களில் போலீசார், கட்டணம் இன்றி பயணிக்க அனுமதி இல்லை' என, தமிழக போக்குவரத்து துறை விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து தமிழக போக்குவரத்து துறை கூறியுள்ளதாவது:போலீசார் பஸ்சில் பயணிக்கும் போது கட்டாயம் டிக்கெட் எடுக்க வேண்டும். வாரன்ட் இருக்கும் பட்சத்தில் மட்டுமே அவர்களுக்கு கட்டணமில்லா பயணம் அனுமதிக்கப்படுகிறது. அந்தத் தொகையையும், போக்குவரத்து துறை அரசிடம் திரும்ப பெற்றுக் கொள்கிறது.எனவே, நாங்குநேரியில் நடைபெற்ற சம்பவத்தின்போது பஸ் நடத்துனருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காவலர் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பா.ஜ., வலியுறுத்தல்
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை விடுத்துள்ள அறிக்கை:கடந்த, 2021 - 22 மானிய கோரிக்கையில், 'பணி செய்யும் மாவட்டத்திற்குள் போலீசாருக்கு இலவச பஸ் பயணம்' என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ள நிலையில், காவலர் ஆறுமுகபாண்டியை இதுபோல துன்புறுத்துவது எந்த விதத்தில் நியாயம்? முதல்வரின் மானிய கோரிக்கை அறிவிப்பு, மூன்று ஆண்டுகள் கடந்தும், போக்குவரத்து கழகங்களுக்கு தெரியப்படுத்தப்படவில்லை என்பது ஆச்சரியத்தை அளிக்கிறது. உடனே, இந்த அறிவிப்பு குறித்து, அனைத்து மாவட்ட போக்குவரத்து கழகங்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும். இச்சம்பவத்திற்காக, காவலர் ஆறுமுக பாண்டி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.