அவதுாறு வழக்கில் நிச்சயம் ஆஜராவேன்
திருநெல்வேலி:அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் குறித்து அவதுாறாக பேசியதாக தன் மீது தொடரப்பட்ட வழக்கில் செப்.13 ல் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உள்ளதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.திருநெல்வேலியில் கடந்த ஜனவரியில் நடந்த புத்தகத் திருவிழாவில் சபாநாயகர் அப்பாவு பேசினார். அதில்' ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கூவத்துாரில் அ.தி.மு.க.,வினர் கூடியிருந்தபோது 40 அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் தி.மு.க.,வுக்கு வர தயாராக இருந்ததாகவும் , ஆனால் நாம் புறவாசல் வழியாக அரசியல் நடத்த வேண்டாம் எனக் கூறி தி.மு.க., தலைவர் ஸ்டாலின் அப்போது மறுத்துவிட்டதாகவும் அப்பாவு பேசி உள்ளார். அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் தி.மு.க.,வுக்கு வர யாரும் முயற்சிக்கவில்லை எனவும் அப்பாவு பேசியது அவதுாறானது 'எனக் கூறி அ.தி.மு.க., வழக்கறிஞர் பிரிவு சார்பில் இணைச் செயலாளர் பாபு முருகவேல், சென்னை எம்.எல்.ஏ., எம்.பி.,களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் கடந்த 9ம் தேதி நடந்த விசாரணையில் அப்பாவு ஆஜராகவில்லை.நேற்று திருநெல்வேலியில் முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி விழாவை துவக்கி வைத்த சபாநாயகர் அப்பாவு நிருபர்களிடம் கூறுகையில் ''அ.தி.மு.க., சார்பில் தன் மீது தொடரப்பட்ட அவதுாறு வழக்கில் செப். 13 ல் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உள்ளேன்' என்றார்.