| ADDED : ஜூன் 06, 2024 10:28 PM
திருநெல்வேலி:நயினார் நாகேந்திரன் 2021ல் வெற்றி பெற்ற சட்டசபை தேர்தலை விட தற்போது மிகக் குறைவாக பெற்று சரிவை சந்தித்துள்ளார்.தமிழக பா.ஜ., துணை தலைவர் நயினார் நாகேந்திரன் திருநெல்வேலி எம்.எல்.ஏ.,வாக உள்ளார். அவர் திருநெல்வேலி லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூசை விட ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 620 ஓட்டுகள் குறைவாக பெற்று தோல்வியுற்றார்.இதில் அதிகபட்சமாக பாளையங்கோட்டை தொகுதியில் 48 ஆயிரத்து 947 ஓட்டுகள் குறைவாக பெற்றார்.தற்போது எம்.எல்.ஏ.,வாக இருக்கும் திருநெல்வேலி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை விட 19 ஆயிரத்து 606 ஓட்டுகள் குறைவாக பெற்றார்.2021 சட்டசபை தேர்தலில் அவர் 92 ஆயிரத்து 282 ஓட்டுகள் பெற்றிருந்தார்.தற்போது 64 ஆயிரத்து 732 ஓட்டுகளே பெற்றுள்ளார். கடந்த சட்டசபை தேர்தலை விட 27 ஆயிரத்து 550 ஓட்டுகள் குறைவாக பெற்றுள்ளார்.25 வாக்குறுதிகள்:லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போது நயினார் நாகேந்திரன் 25 அமைப்பினர்களை அழைத்து 25 வாக்குறுதிகளை அறிவித்தார்.தற்போது எம்.எல்.ஏ.,வாக தொடர்வதால் அவர் அறிவித்த வாக்குறுதிகளில் சிலவற்றையாவது நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.குறிப்பாக திருநெல்வேலி தலைமை மருத்துவமனைக்கு தனது சொந்த நிதியிலிருந்து ஒரு கோடி ரூபாய் வழங்குவேன் என்றார்.திருநெல்வேலி மேற்கு ரிங் ரோடு பணிகள் மிகவும் தாமதமாக நடக்கிறது. அதில் அவரது தொகுதியும் அடங்கும். எனவே திருநெல்வேலி ரிங் ரோடு பணிகள் விரைவாக நடக்க நயினார் நாகேந்திரன் குரல் கொடுக்க வேண்டும்.குலவணிகர்புரம் ரயில்வே மேம்பால திட்டத்திற்கும் அவர் குரல் கொடுக்க வேண்டும். ஒரு லட்சம் இளைஞர்களுக்கு மத்திய அரசின் முத்ரா கடன் மூலம் தொழில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் மத்தியில் பா.ஜ., கூட்டணி அரசு தொடர்வதால் அதையும் அவர் செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்காக தலா இரண்டு சென்ட் இடம் வழங்கப்படும் எனவும் உறுதியளித்திருந்தார். அதற்காகவும் அவர் முயற்சிக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.