| ADDED : டிச 27, 2025 04:21 AM
திருநெல்வேலி: கிறிஸ்துமஸ் மது விருந்தில், வாலிபரை வெட்டிய ஏட்டுவை போலீசார் தேடுகின்றனர். திருநெல்வேலி மாநகர குற்றப்பிரிவு போலீஸ் ஏட்டு டைசன் துரை, 38. இவரது மனைவியின் தங்கை கணவர் மெர்லின், 32; சட்ட கல்லுாரி இறுதி ஆண்டு மாணவர். நேற்று முன்தினம் இரவு, பாளையஞ்செட்டிகுளத்தில் ஒரு தோட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நடந்த மது விருந்தில், டைசன் துரையும், மெர்லினும் பங்கேற்றனர். மெர்லினுடன் அவரது நண்பர்கள் நான்கு பேரும் கலந்து கொண்டு, மது அருந்தினர். இந்நிலையில், போதை தலைக்கேறிய டைசன் துரை, மெர்லினின் நண்பர்களிடம் ஜாதியை கேட்டு தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. அப்போது அவரை மெர்லின், 'அவ்வாறு பேச வேண்டாம்' என கூறியதால் ஏற்பட்ட தகராறில், ஆத்திரமடைந்த டைசன் துரை, மெர்லினின் காது பகுதியில் அரிவாளால் வெட்டினார். காயமடைந்த மெர்லினை, அவரது நண்பர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தாலுகா போலீசார், தலைமறைவான டைசன் துரையை தேடுகின்றனர்.