கனிமொழி காரை முற்றுகையிட்ட அங்கன்வாடி பணியாளர்கள்
திருநெல்வேலி:திருநெல்வேலியில் நடக்கும் பொருநை புத்தக திருவிழாவில், துாத்துக்குடி தி.மு.க., - எம்.பி., கனிமொழி நேற்று மாலை பங்கேற்று, பண்பாட்டு அசைவுகள் என்ற தலைப்பில் பேசினார். தொடர்ந்து, தி.மு.க, சார்பில் நடந்த பொதுக்கூட்டத்திலும் பங்கேற்றார். முன்னதாக, தி.மு.க., மாவட்ட செயலர் அலுவலகத்தில் டி.பி.எம்.மைதீன்கான் முன்னிலையில் கனிமொழி, அங்கன்வாடி பணியாளர்களுக்கு சேலை, போர்வை வழங்கினார்.இதற்காக மதியமே அனுப்பப்பட்டு, மாலை வரை அங்கு காத்திருந்த அங்கன்வாடி பணியாளர்கள் ஆவேசமடைந்தனர். 'எங்களால் ஒரு சேலையோ, போர்வையோ வாங்க முடியாதா? நாங்கள் ஏன் ஒரு நாள் முழுதும் காத்திருக்க வேண்டும். இந்த அரசு அறிவித்தபடி எங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்' என, கனிமொழி எம்.பி., காரை முற்றுகையிட்டு, அங்கன்வாடி பணியாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.