வண்டல் மண் கடத்தல் பிரச்னையில் தி.மு.க., பேரூராட்சி தலைவி மகன் கைது
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடியில் அனுமதி இன்றி வண்டல் மண் கடத்திய தி.மு.க., பேரூராட்சி தலைவி இசக்கத்தாய் மகன் சுரேஷ் கைது செய்யப்பட்டார். இச்சம்பவத்தில் முறையாக தகவல் தெரிவிக்காத எஸ்.ஐ., தனிப்பிரிவு ஏட்டு ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர். திருக்குறுங்குடி பேரூராட்சி தலைவி தி.மு.க.,வைச் சேர்ந்த இசக்கித்தாய். இவரது மகன் சுரேஷ் அங்குள்ள பெரியகுளத்தில் இருந்து டிராக்டர்களில் வண்டல் மண் ஏற்றிச் சென்றார். இதனை போலீசார் வாகன சோதனையில் பிடித்தனர். போதுமான ஆவணங்கள் இன்றி மண்கடத்தியதாக சுரேஷ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பேரூராட்சி தலைவி மகனை போலீசார் கைது செய்ததால் சம்பவத்தன்று உறவினர்கள் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். இது குறித்து தகவல் அறிந்த எஸ்.பி., சிலம்பரசன் அங்கு விசாரணை மேற்கொண்டார். சுரே ஷ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டார். மண் கடத்தல் வழக்கு பதிவு செய்த போதும் மறியல் நடந்த போதும் முறையாக எஸ்.பி.,க்கு தெரிவிக்காத திருக்குறுங்குடி எஸ்.ஐ., ஆப்ரகாம் மற்றும் எஸ்.பி-.,யின் தனிப்பிரிவு ஏட்டு கமலேஷ் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர்.